வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு; மனுக்கள் உடனுக்குடன் பரிசீலித்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று பொதுமக்களிடம் கனிவுடன் பேசுங்கள்

பெரம்பலூர், மே 12: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (11ம் தேதி) திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையஉத்தரவின் பேரில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி மாலைமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. கடந்த 6ம்தேதி மாலைமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கேஸ் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், ஓய்வு பெற்றோர் குறைதீர்க்கும் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், சிறப்பு மனுக்கள் முகாம் போன்றவை அனைத்தும் தடை செய்யப் பட்டிருந்தன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் நேற்று திங்கட்கிழமை முதன் முறையாக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமை வகித்துப் பேசியதாவது : தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்று சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் அரசு அலுவலர்களைத் தேடி வந்து மனுக்களை வழங்குகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்களின் பணி இருக்க வேண்டும். மனுக்களின் மீது உடனுக்குடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். முன்னதாக பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்களை பதிவு செய்வதற்கான இடம் மாற்றப் பட்டுள்ளதையொட்டி பொதுமக்கள் மனுக்களை பதிவு செய்வதற்கான இடங்களையும், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும் மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டார்.

மனுக்களை பதிவு செய்ய வருகை தரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையில், குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கிற்கு தென்புறம் பொது மக்கள் வசதிக்காக 5 மேசைகள் அமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மேசையிலும் மனுக்களை பதிவு செய்ய இணையதள வசதியுடன் கூடிய கணினிகள், மனுக்களை ஸ்கேன் செய்யும் வசதிகள், மனுக்களை பெற்று பதிவு செய்ய ஒவ்வொரு மேசைக்கும் 2 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் இருந்தே குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கிற்கு செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகளும், மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட மாவட்டக் கலெக்டர் மிருணாளினி பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில், நீண்ட நேரம் அவர்களை காக்க வைக்காமல், மனுக்களை பெற்று உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

நேற்றைய பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 180 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுந்தர்ராமன்,மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் மற்றும் அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: