×

மாமல்லபுரம் அருகே இடிந்து விழும் நிலையில் நிழற்குடை

 

 

மாமல்லபுரம், மே 12: மாமல்லபுரம் அருகே வடகடம்பாடி பகுதியில் சேதமடைந்த பேருந்து பயணியர் நிழற்குடையை இடித்து விட்டு, புதிய நிழற்குடை கட்டித்தர பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு திருக்கழுக்குன்றம் – மாமல்லபுரம் நெடுஞ்சாலையையொட்டி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பயணியர் நிழற்குடை ஊராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டது. இதனை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டதால், நிழற்குடையில் பல பகுதிகள் விரிசல் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்து செடி, கொடிகள் முளைத்தும் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவில் அலங்கோலமாக காணப்
படுகிறது.
இந்த நிழற்குடையில் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலா வருவதால் அருகில் செல்ல பயணிகள் அச்சப்படுகின்றனர். மேலும் அந்த நிழற்குடை இன்றோ அல்லது நாளையோ இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த முதியோர்கள் சிலர் ஆபத்தை உணராமல் நிழற்குடைக்கு அருகே பேருந்துக்கு காத்திருக்கின்றனர்.
எனவே வடகடம்பாடி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு செடி, கொடிகள் முளைத்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக ஒரு நிழற்குடை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Mamallapuram ,Vadakadambadi ,Mamallapuram… ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர்,...