×

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி: ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க முடியாமல் தவிப்பு

 

செங்கல்பட்டு, மே 26: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் நோயாளிகளுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி மதுராந்தகம், செய்யூர் மற்றும் அண்டை மாவட்டமான விழுப்புரத்தில் திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதுமட்டுமன்றி, நூற்றுக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி இங்கு தீவிர சிகிச்சை பெற்றும் வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்களின் மருத்துவத் தேவைகளுக்காக முழுமையாக நம்பியிருக்கும் ஒரு முதன்மை மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை 10 மணி அளவில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சி.டி. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே போன்ற அத்தியாவசிய பரிசோதனைகளை செய்ய முடியாமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

குறிப்பாக விபத்தில் சிக்கி எலும்பு முறிவுடன் வந்த நோயாளிகள் வலியால் துடித்தபடி பரிசோதனை நிலையத்தின் வெளியே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து விபத்துகளில் சிக்கி பலத்த காயங்களுடன் ஏராளமான நோயாளிகள் அவசரச் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு அடுத்தகட்ட சிகிச்சையைத் தொடங்குவதற்கு சி.டி. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் மிகவும் அவசியமானதாகும். ஆனால் மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் பரிசோதனை இயந்திரங்கள் அனைத்தும் செயல்படாமல் முற்றிலும் முடங்கின.

இதனால் எலும்பு உடைந்த நிலையில் கடுமையான உடல் வலியோடும், மன உளைச்சலோடும் நோயாளிகள் சி.டி. ஸ்கேன் நிலையத்தின் வெளியே உள்ள தரையிலும், நாற்காலிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வைக்கப்பட்டனர். இவ்வளவு பெரிய மற்றும் முக்கியமான ஒரு அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அடுத்த சில நிமிடங்களிலேயே இயங்கக்கூடிய வகையிலான அவசர கால மின்சேமிப்பு வசதிகளோ, ஜெனரேட்டர் அல்லது மாற்று ஏற்பாடுகளோ முறையாகப் பராமரிக்கப்படவில்லை என நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவமனை நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப் போக்கால் அவசரச் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் உயிர் காக்கும் பரிசோதனைகள் தாமதமானது நோயாளிகளின் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் உடனடியாகத் தலையிட்டு மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இதுபோன்ற அவல நிலை இனி ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நோயாளியின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘எங்கள் உறவினருக்கு விபத்து ஏற்பட்டதால் சிகிச்சைக்காக இங்கு வந்தோம்.

மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்க முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு பண வசதி இருந்தால் வெளியே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று இருப்போம். என் உறவினர் மட்டுமல்லாமல் இங்கே அதிக அளவில் மக்கள் சி.டி. ஸ்கேன் எடுக்கும் வாசலில் வேதனையுடன் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே போர்க்கால அடிப்படையில் மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

 

Tags : Chengalpattu District Government Hospital ,Chengalpattu ,Chengalpattu Government Hospital ,Chengalpattu District Government ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர்,...