கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு நவம்பரில் டிட்வா புயல் தாக்கியது. கடும் மழை,வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 640க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி,புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் புனரமைப்பு பணிகளுக்காக சுமார் ரூ. 4,050 கோடி நிதியுதவி திட்டத்தை இந்தியா அறிவித்தது. இந்த நிதி, உள்கட்டமைப்பு மேம்பாடு, நிவாரணப் பணிகள் மற்றும் புயலால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க உதவும் என இந்தியா தெரிவித்தது.
இந்த நிலையில், கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் சந்தோஷ் ஜா இலங்கை நிதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவை சந்தித்தபோது இந்த விஷயம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது டிட்வா புயலுக்கு பிந்தைய புனரமைப்பு திட்டத்தை விரைவுபடுத்த ஒப்பு கொள்ளப்பட்டது. இதுகுறித்து சந்தோஷ் ஜா எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், இந்த சந்திப்பில் டிட்வா புனரமைப்பு திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு இரு தரப்பிலும் ஒப்பு கொள்ளப்பட்டது. மேலும் பல்வேறு இருதரப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இலங்கை அமைச்சக்கு விளக்கினேன் என குறிப்பிட்டுள்ளார்.
