துபாய்: அமெரிக்கா-ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தத்திற்கு மத்தியில் இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இந்த சூழலில், கடந்த ஒரு வாரமாக பாரசீக வளைகுடாவில் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை மீற முயன்றதாக கூறி 2 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதுபோல ஈரானின் எண்ணெய் கப்பல்கள் அல்லது வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடந்தால், அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எதிரி நாட்டு கப்பல்கள் மீது கடுமையான பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் புரட்சிகர காவல் கடற்படை எச்சரித்திருந்தது. இந்நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து 23 கடல் மைல் தொலைவில் நின்றிருந்த சரக்கு கப்பல் மீது மர்ம பொருள் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இதே போல குவைத் வான்வெளியில் நேற்று அதிகாலை தாக்குதல் நடந்த நுழைந்த டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. இத்தகைய சம்பவங்களால் அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்தம் கேள்விக்குறியாகி உள்ளது. அதே சமயம், அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான தனது பதிலை அனுப்பியிருப்பதாக ஈரான் ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. லெபனான் உள்ளிட்ட அனைத்து தரப்பு போர்களையும் நிறுத்துவதை நோக்கமாக கொண்டதாக தங்களின் பதில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தானுக்கு தனது பதிலை ஈரான் அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதற்கான சூழலும் உருவாகி உள்ளது.
