வைகுண்டம் பகுதியில் வாகன சோதனை தீவிரம் கட்சி கொடிகளுடன் லோடு வேன் பறிமுதல்

வைகுண்டம், மார்ச் 1: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைகுண்டம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றி சென்ற லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான செந்தில்ராஜ் உத்தரவின்படி வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணத்திற்கும் பொருட்களுக்கும் உரிய ஆவணங்கள் உள்ளனவா? என்பதை கண்டறிய வைகுண்டம் பகுதியில் வாகன சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது. தாசில்தார் கோபாலகிருஷ்னன் தலைமையில் பறக்கும் படை அலுவலர் பாலசுப்பிரமணியன், கண்காணிப்புக்குழு அலுவலர் பாண்டியராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லதுரை பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பறக்கும் படையினர் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் ஆழ்வார்திருநகரியில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி காங்கிரஸ் கட்சிக்கொடிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கட்சி கொடிகளுடன் லோடு வேனை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>