பென்னிகுக் பிறந்த நாளையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

கம்பம், மார்ச் 1: பென்னிகுக் பிறந்த நாளை முன்னிட்டு, ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில், சுருளிப்பட்டியில் நேற்று காலை இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுக்கின் 180வது பிறந்த நாளை முன்னிட்டும், தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக விளங்கும் நாட்டுமாடுகளை பாதுகாக்கும் விதமாகவும், ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டி-சுருளி அருவிச்சாலையில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பொன்காட்சி கண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், மாவட்ட செயலாளர் சலேத்து, பொருளாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் களஞ்சியம், வழக்கறிஞர் ஈசன் கலந்து கொண்டனர்.

சிவகங்கை ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி பிரபாகரன் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். முயல் சிட்டு, தேன் சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு, நடு மாடு, பெரியமாடு உட்பட 7 பிரிவுகளில் நடந்த போட்டியில் 227 ஜோடிகள் கலந்து கொண்டன. மாடுகளின் வயதை வைத்து போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த அர்ச்சுனன், சேதுராமன், நாராயணன், சுப்பையா, கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் மாட்டுவண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.

Related Stories: