மல்லசமுத்திரம், மே 8: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டியில் இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு, குடிநீர் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணியளவில் லாரி புறப்பட்டது.
சேலம்- திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அருகே சென்றபோது, அங்கு குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் லாரியின் இடது பக்கம் இறங்கி டயர்கள் மண்ணில் புதைந்தது. இதில் ஒரு பக்கமாக லாரி சாய்ந்தது. இதனால் லாரியில் இருந்த குடிநீர் வெளியேறி வீணானது.
இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் பள்ளத்தில் சிக்கிய லாரியை மீட்டனர். இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காயங்களின்றி தப்பினார். மேலும் இரவு நேரம் என்பதால், போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்பட்டது. குடிநீர் இணைப்பு பணிகள் நிறைவடைந்தும் மூடப்படாமல் உள்ள பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
