×

9.30 மணிக்கு இணைய தளத்தில் பார்க்கலாம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது

 

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வுத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி மையத்தில் (SIEMAT)- வெளியிடப்படுகிறது. மாணவ, மாணவியர் தங்களுக்கான தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணையதளமான www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற இணைய தளங்களில் காலை 9.30 மணி அளவில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோர் அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவருக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித் தேர்வர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் தெரிந்து கொள்ள அவர்களின் வாட்ஸ் அப் செயலியில் 7845252525 என்ற எண்ணைக் கொண்டு, அதன் ஊடாக வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் மாணவரின் வகுப்பை தெரிவு செய்தால், அதற்கு பிறகு வரும் செய்தியில் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து அனுப்பினால் தேர்வு முடிவுகள் அதே வாட்ஸ் ஆப் செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் (வாட்ஸ்அப் செயலி) தேர்வு முடிவுகளை தெரிந்து கெள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் தங்கள் தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மாணவ, மாணவியர் தங்கள் தேர்வு முடிவுகளை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் ஒருவரின் வாழ்க்கை திறமை அல்லது தன் மதிப்பை நிர்ணயிப்பவை அல்ல.

தேர்வு முடிவுகள் எதிர்பார்க்கத்த படி அமையவில்லை என்றாலும் நம்பிக்கையை இழக்கவோ, தமக்குத் தாமே தீங்கு விளைவித்துக் கொள்ளவோ அல்லது எந்த விதமான தீவிர முடிவுகளை எடுக்கவோ கூடாது. தேர்ச்சியடையாத மாணவ, மாணவியருக்கு விரைவில் துணைத் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு ஆதரவாக பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும். இந்த காலகட்டத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் மாணவ, மாணவியருக்கு துணை நிற்க வேண்டும். ஆசிரியர்கள் தேவையின் அடிப்படையில் மாணவ, மாணவியருக்கு வழிகாட்டுதல், ஊக்குவித்தல் மற்றும் ஆலோசனைகளை அளித்து, அவர்கள் நேர்மறை எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க உதவ வேண்டும். மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருக்கான ஆலேசானை உதவிக்கு 14417/104/14416 ஆகிய எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Tags : Chennai ,Directorate of Government Examinations ,Director of Examinations ,
× RELATED 15 ஆண்டுகளாக பயோ காஸ் மூலம் சமையல் செய்யும் பெண் கவுன்சிலர்