×

பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல: ஆளுநரை விமர்சித்து கமல்ஹாசன் பதிவு

 

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கோரியது. ஆனால், தற்போதுவரை ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. ஆளுநரின் இந்த நடவடிக்கையை விமர்சிக்கும் விதமாக நாடளுமன்ற உறுப்பினரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் மு.க.ஸ்டாலின் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம். ‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்திய குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Raj Bhavan ,Kamal Haasan ,Chennai ,Tamil Nadu Victory Party ,Tamil Nadu assembly elections ,Tamil Nadu ,Rajendra Vishwanath Arlekar ,
× RELATED 15 ஆண்டுகளாக பயோ காஸ் மூலம் சமையல் செய்யும் பெண் கவுன்சிலர்