சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி விடுமுறையை ஒட்டி, சில நாட்களுக்கு முன்பு காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற தினமான ஏப்ரல் 23ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (எ) பாம்பு தினேஷ்(35) என்பவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்ற தினேஷ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தான் அத்துமீறலில் ஈடுபட்டதை வெளியில் சொன்னால் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை யாரிடமும் கூறாமல் மயிலாப்பூருக்கு சென்ற சிறுமி தனது சித்தியிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 3ம் தேதி காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், போக்சோ வழக்கு என்பதால் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைத்தனர். ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தினேஷ் தவெக 43வது வட்ட செயலாளராக உள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் தினேஷை பிடிக்க சென்றபோது, அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றிருந்ததால் கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தினேஷை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று காலை சிறையில் அடைத்தனர்.
