சிவகாசியில் நள்ளிரவில் தாக்குதல்; தவெக வேட்பாளருடன் பேசியதால் அதிமுக நிர்வாகி வீட்டில் கல்வீச்சு: மாஜி அமைச்சரின் ஆதரவாளர் மீது போலீசில் புகார்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளர் கீர்த்தனா 68,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங். வேட்பாளர் அசோகன் 57,039, அதிமுக வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி 51,078 வாக்குகள் பெற்றனர். தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து அதிமுகவினர், சிலர் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அக்கட்சிக்குள் புகைச்சல் இருந்து வந்தது. இந்த சூழலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது அக்கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, வாக்கு எண்ணிக்கையின்போது தவெக வேட்பாளர் கீர்த்தனாவுடன், திருத்தங்கல்லை சேர்ந்த அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் பலராம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் அங்கு நின்றுகொண்டிருந்த அதிமுக முகவர்கள் சிலர் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்து, திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு பலராம் திரும்பினார். இரவில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் 2 பைக்குகளில் அங்கு வந்த மர்மநபர்கள், பலராம் வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி நொறுங்கியது. பின்னர், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பலராம், திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் பலராம் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக அதிமுகவின் விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் புதுப்பட்டி சங்கர், திருத்தங்கல் மாரீஸ்வரன் மற்றும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவகாசி டிஎஸ்பி அனில்குமாரிடம், ஆதரவாளர்களொடு சென்று பலராம் புகார் மனு அளித்தார். மனுவில், ராஜேந்திர பாலாஜியின் தோல்விக்கு நீயும், உன்னைச் சார்ந்தவர்கள் தான் காரணம் என்றும், வீட்டில் கல்லெறிந்து விட்டு பயங்கர ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி உறுதியளித்தார்.

Related Stories: