சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 3 இடங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதற்கிடையே சில இடங்களில் மழையும் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலையும் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதனால் கரூர், ஈரோடு, வேலூர் பகுதிகளில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. பிற இடங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 1.5 கிமீ உயரத்தில் தெற்கு மத்திய பிரதேசத்தின் மையப் பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரையில் வதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாகவும், தமிழ்நாடு வழியாகவும் ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலை கொண்டுள்ளது. அதனால் திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றும் கூடிய கனமழை பெய்யும். இதேநிலை 10ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். சென்னையில் 102 டிகிரி வெயில் நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
