மலர் கண்காட்சி நெருங்கியதால் தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணி மும்முரம்

 

ஊட்டி: மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடை காலத்தின்போது, குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வழக்கம். இவர்களை மகிழ்விப்பதற்காகவும், சுற்றுலாவை மேம்பாடுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் கோடையில் பல்வேறு விழாக்கள் சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில், முக்கிய விழாவாக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கிறனர்.

ஆண்டுதோறும் மே மாதம் 3வது வாரத்தில் இந்த மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்கான தேதி முன்னதாக அறிவிக்கப்படும். ஆனால் இம்முறை சட்டமன்றத் தேர்தல் நடந்த நிலையில், மலர்க்கண்காட்சி நடத்தப்படும் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், மே மாதம் 3ம் வாரத்தில் மலர் கட்சி நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால், பூங்காவை பராமரிப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, சால்வியா, டெய்சி, டேலியா உட்பட பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது இச்செடிகளில் மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளன.

இந்த தொட்டிகளில் உள்ள செடிகளில் மலர்கள் முழுமையாக பூத்தவுடன் அலங்கார மேடையில் வைக்கப்படும். இது தவிர பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டுள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் பசுமை மாறாமல் காட்சியளிக்க பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஒரு சில நாட்களில் மலர் கண்காட்சிக்கான அலங்கார பணிகளும் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: