ஈரோடு மாநகராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள்: தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயுமா?

 

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. விளம்பர பதாகைகள், முட்கரண்டி, கரண்டிகள், கத்திகள், உறிஞ்சு குழாய்கள், தட்டுகள் மற்றும் அழைப்பிதழ்கள், சிகரெட் பாக்கெட்டுகள் மேல் சுற்றப்பட்டுள்ள பிளாஸ்டிக் தாள்கள் போன்ற தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி, அதனை பரவலாக்கி வருகிறது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்கள், காய்கறி மார்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிக கூடும் இடங்களில், தாங்களாகவே பெற்றுக் கொள்ளும் வகையில் தானியங்கி மஞ்சள் பை இயந்திரங்கள் வைக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், பேக்கரி வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டின் காரணமாக, மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு மற்றும் நாய் ஆகியவை குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை திண்பதால் அவைகளுக்கு உடல் உபாதை ஏற்படுவது மட்டுமின்றி, மாடுகளில் இருந்து பெறப்படும் பாலை பருகுபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இவை தவிர, கடைகள் மற்றும் பொதுமக்களால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை கால்வாய் மற்றும் மழை வடிகாலில் குவிந்து, சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. மேலும், தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளிலேயே உணவு பார்சல் செய்யப்படுகிறது. இவை பயன்படுத்தப்பட்ட பின்பு குப்பைத்தொட்டியில் கொட்டப்படுகிறது. குப்பை தொட்டிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது மட்டுமின்றி, ஒரு சில நேரங்களில் அவை தீவைத்து எரிக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு அதிகரிக்கிறது. இச்செயல் பசுமையக வாயுக்கள் அதிகரிக்கவும், புவி வெப்பமயமாதலுக்கு காரணமாவது மட்டுமல்லாது அப்பகுதியை சுற்றி இருப்பவர்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்டவை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதை கட்டுப்படுத்தவும், முழுவதுமாக தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தடை செய்யப்பட்ட 750 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தயாரிப்பு நிறுவனங்கள், அரசின் விதிமுறையை மீறி, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி கைவிட்டு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: