திருவண்ணாமலை, மே 5: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம்(தனி), கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி(தனி) ஆகிய 8 தொகுதிகள் உள்ளது. திருவண்ணாமலை தொகுதியில் 30 வேட்பாளர்கள், செங்கம்(தனி) தொகுதியில் 15 வேட்பாளர்கள், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 23 வேட்பாளர்கள், கலசபாக்கம் தொகுதியில் 21 வேட்பாளர்கள், போளூர் தொகுதியில் 15 வேட்பாளர்கள், ஆரணி தொகுதியில் 24 வேட்பாளர்கள், செய்யாறு தொகுதியில் 13 வேட்பாளர்கள், வந்தவாசி(தனி) தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாவட்டம் முழுவதும் 2,517 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டன.
இதில் 8 தொகுதிகளில் இடம் பெற்றிருந்த 19,34,583 வாக்காளர்களில், செங்கம் தொகுதியில் 2,40,467 பேர், திருவண்ணாமலையில் 2,17,782 பேர், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 2,17,325 பேர், கலசபாக்கத்தில் 2,11,500 பேர், போளூரில் 2,08,963 பேர், ஆரணியில் 2,27,492 பேர், செய்யாறில் 2,20,605 பேர், வந்தவாசி தொகுதியில் 1,89,197 பேர் என மொத்தம் 17,32,771 பேர் வாக்களித்துள்ளனர். திருவண்ணாமலை, கலசபாக்கம், செங்கம், கீழ்பென்னாத்தூர் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியிலும், ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஆரணி தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியிலும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று பலத்த பாதுகாப்புடன் திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியிலும், ஆரணி தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியிலும் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலு 88,273 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் அருள்ஆறுமுகம் 85,818 வாக்குகளும், பாஜ வேட்பாளர் எழுமலை 34,280 வாக்குகளும், நாதக வேட்பாளர் விக்னேஷ் 6011 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 758 வாக்குகள் பதிவானது. திமுக வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலு 2,455 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலசபாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி 89,629 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் பெ.சு.தி.சரவணன் 62,889 வாக்குகளும், தவெக வேட்பாளர் ஏழுமலை 51,666 வாக்குகளும், நாதக வேட்பாளர் சீதா 5,312 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 423 வாக்குகள் பதிவானது. அதிமுக வேட்பாளர் 26,740 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேலு 87,802 வாக்குகள் பெற்றுபெற்றார். திமுக வேட்பாளர் மு.பெ.கிரி 70,346 வாக்குகளும், தவெக பேட்பாளர் பாரதிதாசன் 74,306 வாக்குகளும், நாதக வேட்பாளர் 6,335 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 1103 வாக்குகள் பதிவானது. அதிமுக வேட்பாளர் வேலு 13,496 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கீழ்பென்னாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமசந்திரன் 90503 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் பிச்சாண்டி 60038 வாக்குகளும், தவெக வேட்பாளர் ராஜா 59130 வாக்குகளும், நாதக வேட்பாளர் லோகநாதன லோகநாதன் 6184 வாக்குகளும் பெற்றனர்.
நோட்டாவுக்கு 440 வாக்குகள் பதிவானது. அதிமுக வேட்பாளர் 30465 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. வந்தவாசி தொகுதியில் திமுக வெற்றி எஸ்.அம்பேத்குமார் 63,805 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ராணி பெருமாள் 60,472 வாக்குகளும், தவெக வேட்பாளர் உதயகுமார் 58,174 வாக்குகளும், நாதக வேட்பாளர் கணேஷ் 5,495 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 913 வாக்குகள் செலுத்தப்பட்டிருந்தது. திமுக வெற்றி எஸ்.அம்பேத்குமார் 3,333 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில், செய்யாறு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன் 86,680 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் ஓ.ஜோதி 59,894 வாக்குகளும், தவெக வேட்பாளர் தூசி கே.மோகன் 65,599 வாக்குகளும், நாதக வேட்பாளர் தமிழ்செல்வன் 7,043 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்து இடத்தை பிடித்தனர். செய்யாறு தொகுதியில் மொத்தம் 950 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. அதிமுக வேட்பாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன் 21,081 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
