சூறாவளி காற்றுடன் கனமழை 150 ஏக்கர் வாழை சேதம் படவேடு பகுதியில்

கண்ணமங்கலம், மே 5: திருவண்ணாமலை மாவட்டம், படவேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையுடன் சேர்த்து பயங்கரமான சூறாவளி காற்றும் வீசியது. இந்த சூறாவளி காற்றின் வேகம் தாங்க முடியாமல், படவேடு, புஷ்பகிரி, வாழியூர், கால சமுத்திரம், அனந்தபுரம், கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்தன. குறிப்பாக, அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 150 ஏக்கர் வாழை மரங்கள் சேதமானது. வாழை மரங்கள் சேதமடைந்த தகவல் அறிந்ததும், மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் பா. லோகேஷ் தலைமையில், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Related Stories: