வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை: பயணிகள் அவதி

சென்னை: சென்னையில் இருந்து தினசரி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் கிராமப்புறங்களில் திருவிழா காலம் என்பதால், சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, வெள்ளிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை தினங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை ரூ.1900 முதல் ரூ.5000 வரை கூடுதலாக வசூலித்து வருகின்றன.

சாதாரண நாட்களில் ரூ.800 முதல் ரூ.2000 வரை இருக்கக்கூடிய கட்டணங்கள், தொடர் விடுமுறை நாட்களையொட்டி பலமடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களும் வேறு வழியின்றி கூடுதல் பணம் கொடுத்து பயணிக்கும் நிலை உள்ளது. முன்பெல்லாம் ரூ.2000 இருந்தாலே போதும், எளிதாக ஒரு குடும்பத்தினர் வெளியூர் பயணம் மேற்கொள்ள முடியும் என்கிற சூழ்நிலையில், தற்போது, 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் கூட ஒரு குடும்பத்தினர் வெளியூர் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, அதிகரித்து வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பயணிகளிடம் அதிக கட்டணங்களை வசூலித்து விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது அபராதம், வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: