சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளார்களுடன் பனையூரில் ஆலோசனை நடத்திய விஜய், வெற்றி பெற்றால் எங்கும் சென்றுவிடாதீர்கள்; பனையூர் வந்துவிடுங்கள் என வேட்பாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் முறையாக தேர்தலைச் சந்தித்தார்.
அந்த கட்சி 233 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளரை ஆதரித்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு விஜய் தவெக முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் வாக்குப்பதிவு, வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது, வாக்கு எண்ணிக்கையின் போது செய்ய வேண்டியவை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான நாள் நெருங்கி வரும் சூழலில் நேற்று மாலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அனைத்து தவெக வேட்பாளர்களையும் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும், எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும், காலை 6 மணிக்கே வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்றுவிட வேண்டும், வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டியவை உள்ளிட்டவை குறித்து விஜய் வேட்பாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
மேலும், ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜய், நாம் அனைவரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வேட்பாளார்கள் வெற்றி பெறும்பட்சத்தில் எங்கும் சென்றுவிடாமல் நேராகப் பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள்; நான் பனையூர் அலுவலகத்தில் உங்களுக்காக காத்திருப்பேன் என வேட்பாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே, எடப்பாடி தொகுதியில் போட்டியிட தவெக சார்பில் வேட்பாளராக அறிவித்த அருண்குமார் என்பவர் எதிர்த்துப் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமியிடம் பணம் வாங்கிக்கொண்டு தலைமறைவானதாக ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெகவினர் தெரிவித்தனர். இந்நிலையில், தவெக வேட்பாளர்கள் யாராவது ஒருவேளை வெற்றிபெற்றால் அவர்கள் மற்ற கட்சிகளிடம் விலை போய்விடுவார்களோ என்ற பயத்தில்தான் விஜய் இவ்வாறு வேட்பாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
