மூட்டு வலியின் நிவாரணியாக செயல்படும் ஆக்வா தெரபி!

நன்றி குங்குமம் தோழி

நாற்பது வயதினை கடந்துவிட்டாலே நம்முடைய உடலில் சின்னச் சின்ன பிரச்னைகள் தலை தூக்க ஆரம்பிக்கும். அதில் பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் நோயின் பாதிப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் மூட்டு வலியினால் பாதிக்கப்படுகிறார்கள். ‘‘வயதானவர்களுக்குதான் மூட்டு வலி ஏற்படும் என்ற காலம் மாறி நாற்பது வயதிற்கு மேலானவர்களும் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். மூட்டுவலிக்கான தீர்வு அறுவை சிகிச்சை என்றில்லாமல், அதனை சிகிச்சைகள் மூலமாக வலி மற்றும் நோயின் பாதிப்பு அதிகரிக்காமலும் பாதுகாக்க முடியும்’’ என்கிறார் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ராம் கிருஷ்ணமூர்த்தி.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பயிற்சி பெற்று கடந்த 15 வருடங்களுக்கு மேலாக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, முழங்கால் ஆர்த்ரோஸ்கோப்பி மற்றும் விளையாட்டினால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். சென்னையில் பிரபல மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை நிபுணராக வேலை பார்த்து வரும் இவர் ‘இயன்முறை மற்றும் மறுவாழ்வு’ சிகிச்ைச மையம் ஒன்றை அடையாரில் துவங்கி, அங்கு எலும்பு சம்பந்தமான அனைத்து சிகிச்சை முறைகளையும் அளித்து வருகிறார்.

‘‘விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் எலும்பு சம்பந்தமான காயங்கள் மற்றும் கால் மூட்டு குறித்த சிகிச்சையினை அளித்து வந்த போதுதான், இதற்கான மறுவாழ்வு சிகிச்சை குறித்து தெரிய வந்தது. வெளிநாடுகளில் மூட்டு பிரச்னைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாட்டார்கள். இயன்முறை மருத்துவம் மற்றும் மருந்துகள் கொண்டு அதனை சரி செய்ய பார்ப்பார்கள். அது பலன் அளிக்காத போதுதான் அறுவை சிகிச்சை செய்ய முன்வருவார்கள். ஆனால், இங்கு அப்படி இல்லை. மூட்டு வலி என்றாலே அறுவை சிகிச்சை என்றாகிவிட்டது’’
என்றவர், மூட்டில் ஏற்படும் பிரச்னைக்கான மாற்று சிகிச்சை குறித்து விவரித்தார்.

‘‘மூட்டு பிரச்னைக்கு ஆர்த்ரோஸ்கோபி மற்றும் மாற்று அறுவை சிகிச்சைதான் முக்கியமாக கருதப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சிகிச்சை முறைதான் மூட்டு பிரசர்வேஷன். சிலருக்கு மூட்டு பிரச்னை இருக்கும். ஆனால், அறுவை சிகிச்சை செய்ய விருப்பமிருக்காது. அவர்களுக்கு பிரச்னை அதிகரிக்காமல் இருக்க உதவுவதுதான் இந்த பிரசர்வேஷன் சிகிச்சைகள். வலி மற்றும் மூட்டில் உள்ள பிரச்னை மேலும் அதிகரிக்காமல் இருக்க மருந்துகளால் மட்டும் இல்லாமல் தனிப்பட்ட சிகிச்சைகளும் அளிக்கப்படும்.

பொதுவாக மூட்டுவலிக்கு முக்கியமான எதிரி உடல் பருமன். அதை குறைத்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து மூட்டில் உள்ள தசைகள் வலுவடைய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மூட்டு எலும்பு தேயாமல் பாதுகாக்கலாம். PRP மற்றும் ஸ்டெம்செல் சிகிச்சைகள் இந்தப் பிரச்னைக்கு இன்று ஒரு நல்ல தீர்வாக பார்க்கப்படுகிறது. PRP, நம்முடைய ரத்தத்தினை எடுத்து அதன் மூலம் தட்டணுக்களை உருவாக்கி மூட்டுகளில் செலுத்துவோம். இதன் மூலம் அணுக்கள் உடைந்து மூட்டுகளில் உள்ள ஜவ்வு மேலும் பாதிப்படையாமல் பாதுகாத்து புதுப்பிக்க செய்யும்.

ஸ்டெம்செல்கள் நம்முடைய எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுப்பது. கொழுப்புகளிலும் அதிகளவு ஸ்டெம்செல்கள் இருக்கும். இந்த சிகிச்சையினை மயக்க மருந்து கொடுத்துதான் செய்ய வேண்டும். முன்பு மூட்டுவலிக்கு ஸ்டீராய்டு ஊசிதான் போடுவார்கள். அது வலியை குறைக்குமே தவிர எந்த தீர்வும் கொடுக்காது. மூட்டுகளுக்கு நடுவில் அடர்த்தியான திரவம் இருக்கும். அந்த திரவத்தின் அளவு மற்றும் அடர்த்தி குறைந்தால் எலும்பு உராய்ந்து வலியினை அதிகரிக்கும்.

அதை தடுக்க மூட்டிகளில் ஜெல்லினை செலுத்துவதால், மூட்டுகளுக்கு இடையே குஷன் போல் செயல்பட்டு எலும்பு உராய்வதை தடுத்து வலியையும் குறைக்கும். அதே சமயம் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ஆர்த்ரைடிஸ் நோயின் நான்காம் நிலையில் இருந்தால் அவர்களுக்கு அறுவை சிகிச்சைதான் சிறந்த தீர்வு. மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து இயன்முறை மருத்துவம் செய்து வந்தால், தசைகள் வலுவடைந்து எலும்புகளுக்கு ஒரு அரணாக அமையும்’’ என்றவர், ஆக்வா தெரபி குறித்து விவரித்தார்.

‘‘மூட்டு வலிக்கு முக்கியமான எதிரி உடல் பருமன். எடை அதிகரித்தால் சர்க்கரை நோய் பாதிக்கும். இதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஆனால், உடல் பருமன் காரணமாக அவர்களால் நடக்கவோ, உடற்பயிற்சி மேற்கொள்ளவோ முடியாது. அந்த சமயத்தில் ஆக்வா தெரபி கை கொடுக்கும். தண்ணீருக்குள் இருக்கும் போது உடல் எடை குறைந்து நாம் மிதப்பது போல் உணர்வோம். அவர்கள் நடந்து உடற்பயிற்சியினை மேற்கொள்கிறார்கள் என்ற உணர்வு இருக்காது. எளிதாக நடக்கவும் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.

ஆக்வா தெரபி நம்மூரில் பெரிய அளவில் நடைமுறையில் இல்லை. முன்பு நீச்சல் குளங்களில் இந்த சிகிச்சை முறைகளை செய்து வந்தார்கள். ஆனால், இன்று அதனை நடைமுறைப்படுத்த முடிவதில்லை. அதனால் இங்கு சிகிச்சை மையத்தில் அஹமதாபாத்தில் இருந்து ஆக்வா தெரபி அமைக்கும் வல்லுனர்களை கொண்டு நீச்சல் குளம் ஒன்றை அமைத்திருக்கிறேன். இது நட்சத்திர ஓட்டல்களில் காணப்படும் சாதாரண நீச்சல் குளம் கிடையாது. பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்படும் தண்ணீரும் RO மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர். குளிர்காலத்தில் தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்க ஹீட்டர் பொருத்தி இருக்கிறோம். தனிப்பட்ட அறையில் அமைக்கப்பட்டிருப்பதால், சிகிச்சை பெற வருபவர்களுக்கும் அசௌகரியம் இருக்காது. தண்ணீருக்குள் அவர்களின் நிலைக்கு ஏற்ப உடற்பயிற்சி வழங்கப்படும். 30 நிமிடம் பயிற்சி செய்தாலே நல்ல பலனை பார்க்க முடியும்.

ஆக்வா தெரபி மட்டுமில்லாமல் ரோபோ ஸ்பைன் சிகிச்சையும் இங்கு வழங்குகிறோம். சிலருக்கு முதுகுத்தண்டு பிரச்னை இருக்கும். டிஸ்க் வீக்கமடைந்து டிராக்‌ஷன் வைப்பார்கள். அவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட டிஸ்க் மட்டுமில்லாமல் முதுகுத்தண்டு முழுதும் அதன் தாக்கம் இருக்கும். ரோபோ ஸ்பைன் சிகிச்சையில் பாதிப்புள்ள டிஸ்கில் மட்டும் சிகிச்சை அளிக்க முடியும். மேலும், சிகிச்சையின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டால், சென்ஸார் மூலம் கண்டறிந்து தீர்வினை அளிக்கலாம். இவை தவிர தாய்சீ, யோகா, இயன்முறை மருத்துவம் என ஒவ்வொருவரின் பிரச்னைக்கு ஏற்ப அளிக்கிறோம்.

ஆர்த்ரைடிஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் எலும்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் எவ்வாறு தீர்வு அளிக்கலாம் என்று ஒவ்வொரு சிகிச்சை முறைகளையும் ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவ துறையில் தொழில்நுட்பமும் வளர்ந்து வருவதால், அதற்கேற்ப சிகிச்சை முறைகளையும் அறிமுகம் செய்யும் திட்டமுள்ளது. உதாரணத்திற்கு நம்முடைய தொடைகளில் நான்கு தசைகள் இருக்கும். அதில் எந்த தசை வலுவிழந்து இருக்கும் என்று கண்டறிந்து அதனை மட்டும் வலுவாக்க அட்வான்ஸ்டு இயந்திரங்கள் உள்ளன’’ என்றார், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஸ்ரீ ராம் கிருஷ்ணமூர்த்தி.

தொகுப்பு: நிஷா