வேளாண்மையில் நானோ யூரியா பயன்படுத்தலாம் அறிவியல் மையம் விளக்கம்

தா.பழூர், ஏப். 30: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் வேளாண்மையில் நானோ யூரியா பயன்பாடு குறித்தும் விவசாயிகள் பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர். இதில் நானோ யூரியா என்பது யூரியாவின் நானோ வடிவமாகும், இது பயிர்களுக்கு நைட்ரஜனை வழங்குகிறது. இது ஒரு திரவ உரமாகும், இதனை தெளிப்பதன் மூலம் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது பாரம்பரிய யூரியா உரத்திற்கு ஒரு மாற்றாக கருதப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 500மிலி போதுமானது.

நானோ யூரியா பயன்பாடுகள்: நானோ யூரியா நைட்ரஜனை பயிர்களுக்கு திறம்பட வழங்குகிறது. இது வளர்ச்சி மற்றும் மகசூலை மேம்படுத்துகிறது. மேலுரமாக பயன்படுத்த பாரம்பரிய யூரியாவை விட நானோ யூரியா 50 சதவீதம் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது, இது உர செலவைக் குறைக்கிறது. யூரியா கசிவு மற்றும் வாயு உமிழ்வு போன்ற நைட்ரஜன் இழப்பைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் பல பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில் இலைவழி தெளிப்பு முறையிலும் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 2 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். இதன் விலை ஏக்கருக்கு 450 ரூபாய் ஆகும். மேலும் இது தொடர்பான சந்தேகங்களை உழவியல் தொழில்நுட்ப வல்லுனர், திருமலை வாசன், 9688810919 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் டாக்டர் அழகுகண்ணன் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: