குறைதீர் கூட்டம் கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

திண்டுக்கல், பிப். 26: திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில்  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த விவசாயி நல்லுசாமி மற்றும் விவசாயிகள், பேசுகையில், தங்கள் பகுதியில் வெள்ளை ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் தென்னை மரங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறது. தென்னை குருத்து, ஓலைகள் என அனைத்தும் வெள்ளை ஈக்களால் பாதிக்கப்படுகிறது என்று கூறினர். இதற்கு பதிலளித்த வேளாண்மை துறை துணை இயக்குனர் சுருளியப்பன், வெள்ளை ஈக்களை அழிக்கும் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நத்தம் பகுதியில் காட்டெருமைகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், மாமரங்களை அவை நாசப்படுத்தாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். எனவே, வனப்பகுதியைவிட்டு அவை வெளியே வராமல் தடுக்க வேலி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர்.

நொச்சியோடைப்பட்டி தேயிலை தோட்டங்களில் உற்பத்தியாகும் கொசுக்களால் கொய்யா சாகுபடி பாதிக்கப்படுகிறது. எனவே,பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.  இதைத்தொடர்ந்து கவராயப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் மயில்களால் மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் தெரிவித்தனர்.ஆண்டிப்பட்டி ஊராட்சி  தணக்கலங்காடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கருகிய நெற்பயிர்களுடன் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் எங்கள் பகுதியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் கருகிவிட்டன. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே,எங்கள் நிலங்களுக்கு பட்டா வழங்குவதுடன், உரிய நிவாரணமும் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இக்கூட்டத்தில் வேளாண்மை துறை துணை இயக்குனர் சுருளியப்பன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு இணை பதிவாளர் முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: