அரசு ஊழியரின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை

அரியலூர், ஏப்.29: அரியலூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை மருந்தாளுநர். இவருக்கு, கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக, அவரது மனைவி மாதவி, செல்வராஜை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலம் தேறிய செல்வராஜ் அங்குள்ள தனது உறவினர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாதவி மட்டும் அரியலூர் வந்து வீட்டை பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அரியலூர் போலீசார் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே ராஜீவ் நகர் பகுதியில் அடிக்கடி திருடு போவது வழக்கமாக உள்ளது. மேலும், தற்போது திருடு போன செல்வராஜ் வீட்டில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திருட்டு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: