அங்கன்வாடி ஊழியர்கள் 3ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், பிப். 25: அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 3ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணை தலைவர் பாக்கியம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எல்லம்மாள், பொருளாளர் பேபி, துணை தலைவர் கஸ்தூரி, ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். முறையான குடும்ப ஊதியத்தை அறிவிக்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போராட்ட இடத்தில் சமையல் செய்து சாப்பிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>