விழாக்களை ஆடம்பரமாகத்தான் நடத்த வேண்டுமா?

?சில கோயில்கள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட வஸ்திரங்களை ஏலம் விடுகிறார்கள் அதனை வாங்கி உடுத்தலாமா?
– கணேஷ்குமார், திசையன்விளை.
தாராளமாக உடுத்தலாம். அது சுவாமி பிரசாதம்தானே.

?விழாக்களை ஆடம்பரமாகத்தான் நடத்த வேண்டுமா?
– சீனுவாசன், திண்டிவனம்.
தேவையில்லை; சிக்கனமாக நடத்தலாம். அதில் மீறும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்து உதவலாம் அல்லது ஏதேனும் மற்றவர்களுக்கு பலன் தரும் நற்பணிகளைச் செய்யலாம்.

? நம்முடைய சமயத்தில் ஏதோ ஒரு வகையில் 365 நாட்களும் உற்சவம் விரதம் என்று இருக்கிறதே இத்தனையும் ஒருவரால் அனுசரிக்க முடியுமா?
– பட்டாபிராமன், கும்பகோணம்.
எல்லா உற்சவங்களையும் விரதங்களையும் எல்லோரும் அனுசரிப்பது இல்லை. அவரவர்கள் சில உற்சவங்களையும் விரதங்களையும் அனுஷ்டிப்பார்கள். ஆனால், 365 நாட்களும் உற்சவங்களும் விரதங்களும் இருப்பது நல்லதுதானே. ஒரு நாள் கூட ஆன்மிக உணர்விலிருந்து வேறு நினைக்காமல் இருப்பதற்கும் அமைதி பெறுவதற்கும் இந்த உற்சவ விரதங்கள் உதவும் அல்லவா. தினந்தோறும் திருவிழா என்று இதனைத்தானே சொன்னார்கள்.

? ராகு – கேது என்பதை ஆன்மிக ரீதியாக விளக்க முடியுமா?
– சாந்திதேவி, விருத்தாசலம்.
ஜோதிட சாஸ்திரம் என்பதை ஆன்மிகத்தைப் புரிந்து கொள்வதற்கான சாஸ்திரம்தான். அதனால்தான் வேத அங்கங்களில் ஒன்றாக ஜோதிடத்தை வைத்தார்கள். அதுமட்டுமில்லை. அதனைக் கண்ணாக வைத்தார்கள். சாதாரண கண்களால் பார்க்க முடியாததைகூட, அதாவது எதிர்காலத்தைக் கூட. ஜோதிடத்தைக் கொண்டு பார்க்க முடியும் என்றார்கள். இந்த அடிப்படையில் கிரகங்களை புரிந்து கொள்ள வேண்டும். ராகு – கேது என்பது ஒரே விஷயத்தில் சுருக்கமும் விரிவும்தான். அதனால்தான் தலையாகவும் வாலாகவும் வைத்தார்கள். ராகு என்பது பேராசை பெரிய திட்டம் அகலமாக கால் வைத்தல் முதலியவற்றைக் குறிக்கும். கேது என்பது சுருங்கிய ஆசை, ஞானம், மனதிற்குள் ரகசியங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். இது ஒரு பலூன் போல. காற்று இல்லாவிட்டாலும் பிரயோஜனம் இல்லை. அதிகமாக காற்றை ஊதிக் கொண்டே போனாலும் பலூன் வெடித்து விடும். ராகுவைப் போல் இல்லாமலும், கேதுவைப் போல் இல்லாமலும் மனிதன் பக்குவமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் ராகு – கேது வெளிப்படுத்தும் தத்துவம்.

? இறைவனை வணங்குவதால் நமக்கு வரும் வினையின் விளைவுகளை தடுத்துக் கொள்ள முடியுமா?
– சண்முக சுந்தரம், வேதாரண்யம்.
தடுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் எல்லோரும் கோயிலுக்குப் போகிறார்கள். ஆனால், ஆன்மிகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் நுகர்வினையை மாற்ற முடியாது என்று முடிவாகச் சொல்லுகின்றார்கள். அப்படியானால் இறைவன் இந்த விஷயத்தில் எப்படி உதவுவான் என்று கேட்கலாம்? நுகர் வினையை தடுக்க முடியாதே தவிர கடப்பதற்கு இறைவன் உதவுவான். நீங்கள் வெயிலில் நடந்துதான் ஆகவேண்டும். அதை நீங்கள் மறுக்க முடியாது. தவிர்க்க முடியாது. ஆனால், இறைவன் அருளால், உங்களுக்கு ஒரு குடை நிழல் கிடைத்துக் கொண்டே இருக்கும். கோயில் வழிபாடு ஆன்மிகம், தியானம் எல்லாவற்றிலும் பலன் இதுதான். இறை அருளால் நுகர் வினைகளை தடுக்க முடியாது. கடக்க முடியும்.

? இப்போது உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் ஆவதில் மிகுந்த தாமதம் ஏற்பட என்ன காரணம்? கிரக தோஷமா?
– சிவராமன், தஞ்சாவூர்,
நவகிரகங்கள் மற்றும் ஜாதகக் கட்டங்களை என்றைக்குக் கண்டுபிடித்தார்களோ அன்றையிலிருந்து அதே ஒன்பது கோள்களும் 12 கட்டங்களும்தான் இருக்கின்றன. இளமை திருமணங்கள் நடந்த காலங்களிலும் இதே கட்டங்கள்தான். முதுமை ஆகியும் திருமணம் நடக்காத காலங்களிலும் இதே கட்டங்கள்தான். அப்படியானால் இதில் கிரகங்கள் என்ன தோஷம் செய்துவிட முடியும்? இப்போதைய கால சூழ்நிலையில், திருமண உறவை அநேகமாக யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஆண்களுடைய சிந்தனையும் பெண்களுடைய சிந்தனையும் முற்றிலுமாக மாறிவிட்டது. பெரும்பாலும் அமைதியான வாழ்க்கையைவிட ஆர்ப்பாட்டமான ஆடம்பரமான வாழ்க்கையின் மீதுதான் எல்லோருக்கும் கண்ணாக இருக்கிறது. திருமண வாழ்க்கை மீது அவநம்பிக்கை வந்து விட்டது. பெற்றோர்களும் இதில் விதிவிலக்கல்ல. எல்லாரும் சேர்ந்து கிரகத்தின்மீது பழியைப் போட்டுவிட்டு தப்பித்துக் கொள்கின்றார்கள்.

? மாங்கல்யக் கயிற்றை எப்போது மாற்ற வேண்டும்? அடிக்கடி மாற்ற வேண்டுமா?
– கல்யாண சுந்தரம், திருச்சேறை.
இப்போதைக்கு மஞ்சள் மாங்கல்யக் கயிறு அணிபவர்கள் மிகவும் குறைவு. அப்படி அணிபவர்கள் அவ்வப்பொழுது (பழுதுபடும் பொழுது) மாற்றிக் கொள்ளலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொள்ளலாம். அல்லது விசேஷமான நாள்களில் (சுவாமி திருக்கல்யாணம் ) மாற்றிக் கொள்ளலாம். செவ்வாய்க் கிழமை, வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் ராகு காலம் எம கண்டம் இல்லாத வேளை பார்த்து மாற்றிக் கொள்ளலாம். முற்பகலில் மாற்றிக் கொள்வது சிறந்தது. பூஜை அறையில் மாற்றிக் கொள்ளலாம்.

? பதினாறு ஆயுதங்களையும் தாங்கி இருக்கும் மூர்த்தி யார்?
– கார்த்திக், திருவள்ளூர்.
பெருமாள் சந்நதியில் ஜ்வாலா நரசிம்மரும் சக்கரத் தாழ்வாரும் இருப்பார்கள். சக்கரத்தாழ்வாரின் கரங்களில் 16 ஆயுதங்களும் இருக்கும்.

?அன்பு என்பது பணத்தைப் பொருத்ததா?
– பரமேஸ்வரி, திருச்செங்கோடு.
அன்பு என்ற சொல்லுக்குப் பொருள் பலருக்குத் தெரியவில்லை. எதையும் எதிர்பார்க்காமல் வருவதுதான் அன்பு. பணத்தைப் பொறுத்து அன்பு எப்படி வரும்? அப்படியானால் அன்பு என்பது பணம் உள்ளவர்களுக்கு உரியதாக ஆகிவிடுமே. எனவே, அன்பு என்பது பணத்தைப் பொறுத்ததல்ல; மனத்தைப் பொறுத்தது.

?மரணமில்லா பெருவாழ்வு என்பது என்ன? இறக்காமல் இருப்பதா?
– அசோக்குமார், பழனி.
இறக்காமல் ஒரு மனிதன் எப்படி இருக்க முடியும்? அப்படியானால் மரணமில்லாப் பெருவாழ்வு என்று வள்ளலார் சொன்னது பொய்யா என்று கேட்கலாம். வள்ளலார் போன்ற உத்தமர்கள் எப்படி பொய் சொல்வார்கள்? எனவே, இறந்தும் இறக்காமல் இருப்பதுதான் மரணமில்லாப் பெருவாழ்வு. இதைச் சொன்ன வள்ளலாரை இன்றைக்கும் சிந்திக்கிறோம் வணங்குகிறோம் அல்லவா. இதுதான் மரணமில்லாப் பெருவாழ்வு.

? கல்வியின் மிகப்பெரிய பலம் எது?
– கமலா, அரியலூர்.
ஒழுக்கம் தான். ஒழுக்கம் விழுப்பம் தரும்.

? சாந்தி ஹோமங்கள் எதற்காகச் செய்யப்படுகின்றன?
– அமராவதி, ஆற்காடு.
நோய் முதலிய பல்வேறு தடைகளை விரட்டுவதற்காக சாந்தி ஹோமங்களைச் செய்கின்றோம். பொதுவாக ஜாதகத்தில் ஆறாம் பாவம், எட்டாம் பாவம், 12ஆம் பாவங்களில் தோஷங்கள் இருந்தால் அதை நீக்கிக் கொள்வதற்கு நவகிரக ஹோமங்கள் முதலிய சாந்தி ஹோமங்கள் உதவும்.

? வாசுதேவன் என்ற பெயருக்கு பொருள் என்ன?
– அருணகிரி, கடலூர்.
பகவானுக்கு வாசுதேவன் என்று பெயர். இதற்கான பொருள் அற்புதமானது. நாராயணன் என்ற சொல்லுக்கு உரிய பொருளும் விஸ்வம் என்ற சொல்லுக்குரிய பொருளும் வாசுதேவ சப்தத்திற்கு வரும். பராபரமாய் விளங்கும் ஸ்ரீமன் மகாவிஷ்ணு உலகத்தில் உள்ள சர்வ பொருள்களிலும் வியாபித்திருக்கிறார். சர்வப் பொருள்களும் அவருள் அடங்கியிருக்கின்றன என்பதை உணர்த்துவதுதான் வாசுதேவ சப்தம். வாசுதேவாய நமஹா என்று ஒருமுறை கூறினாலே, அந்த பரப்பிரம்ம சொரூபம் நம் நெஞ்சில் தோன்றும். கிருஷ்ணாவதாரத்தின் பகவானின் திருத்தந்தைக்கு வாசுதேவன் என்று பெயர்.

? துளசிச் செடியை பால்கனியில் வைக்கலாமா?
– சுப்புலட்சுமி, கள்ளக்குறிச்சி.
இப்பொழுது நாம் இட நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, தோட்டம் முதலிய வசதிகள் இல்லாத பொழுது பால்கனியில் வைக்கலாம் தவறில்லை. ஆனால், ஒரு விஷயம். துளசிச்செடி என்பது ஏதோ வீட்டில் இருக்கக் கூடிய வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜிரேட்டர் போல அல்ல. அது தெய்வ சாந்நித்தியம் உள்ள செடி. ஒரு துளசிச் செடி வீட்டில் இருந்தால் ஆயிரம் தோஷங்கள் போகும்.
துளசிச் செடி அருகில் பகவான் இருக்கிறான் என்று பொருள்.. எந்த இடத்தில் துளசி இருந்தாலும் அந்த இடத்திலே பகவான் கிருஷ்ணன் வந்து விடுவான் என்று புராணங்கள் சொல்லுகின்றன. எனவே, அதற்குரிய மதிப்பையும் வழிபாட்டையும் தர வேண்டும். செடி காய்ந்து போக விடக்கூடாது. தினசரி பூஜை செய்து வணங்க வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும். அந்த இடம் சுத்த பத்தமாக இருக்க வேண்டும். பழைய துணிகளையும் மற்ற அழுக்குகளையும் அங்கே போட்டு வைக்கக் கூடாது. இப்படி எல்லாம் நீங்கள் வைத்துப் பராமரிக்க முடியும் என்றால் துளசிச் செடியை பால்கனியில் வைக்கலாம்.

? மூன்றாம் பிறை பார்ப்பதால் பணக் கஷ்டங்கள் தீருமா?
– குமாரசுப்ரமணியன், திருவண்ணாமலை.
அப்படி எல்லாம் நம்பாதீர்கள். என்னதான் பக்தி இருந்தாலும் கொஞ்சம் பகுத்தறிவையும் பயன்படுத்த வேண்டும். பணக்கஷ்டம் உள்ளவர்கள் எல்லாருமே அதைத் தீர்த்துக் கொள்ளும் வழி தேடாமல், மூன்றாம் பிறையைப் பார்த்துக் கொண்டிருந்தால் முடியுமா? நடக்குமா? ஆனாலும் இது எதற்காகச் சொல்லப்பட் டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அமாவாசை என்பது இருட்டு. குழப்பம். அதிலிருந்து மெல்லிய கீற்று போல் ஒரு வெளிச்சம் தென்படும் நாள் மூன்றாம் பிறை நாள். ஒரு குழப்பமான மனநிலையில் மூன்றாம் பிறையைப் பார்க்கும் பொழுது உள்ளுக்குள், நம்முடைய பிரச்னையை தீர்க்கின்ற சின்ன வெளிச்சம் கிடைக்கும். அதற்கான குறியீடுதான் மூன்றாம் பிறையைப் பார்ப்பது.

? வங்கார தோசை என்றால் என்ன?
– சித்ரா, வேளச்சேரி.
நம்முடைய ஆலயங்களிலே காஞ்சிபுரம் இட்லி, திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், திருக்கண்ணபும் முனியோதரன் பொங்கல் என பல்வேறு விதமான நிவேதனங்கள் உண்டு. அதைப்போல வங்கார தோசை என்பது ஒரு பணியாரம். திருநெல்வேலிக்கு பக்கத்திலே நம்மாழ்வார் அவதாரம் செய்த ஆழ்வார் திருநகரி இருக்கிறது. அங்கே விசேஷமான நிவேதனம் வங்கார தோசை. இந்தத் தோசையை தினமும் மூலவர் ஆதிநாதருக்குப் படைப்பார்கள். நல்ல கெட்டியான தோசையில் வெல்லக் கரைசலை தடவி ஆப்பம் போல் செய்திருப்பார்கள்.

?புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகுமா?
– புருஷோத்தமன், சிவகாசி.
வடக்கே ஒரு பாகவதர் இருந்தார். அவர் தன்னுடைய கடமையை மட்டும் கண்ணாகச் செய்து கொண்டிருப்பார். அப்படிக் கடமையைச் செய்யும்போது மனதுக்குள் கிருஷ்ணா… கிருஷ்ணா… என்று சொல்லிக்கொண்டு இருப்பார். ஒருநாள் சில யாத்ரிகர்கள் அவரிடம் வந்து, ‘‘நாங்கள் தீர்த்த யாத்திரை போகிறோம் நீங்களும் வாருங்களேன்” என்று அழைத்தனர். அவர்களை அன்புடன் உபசரித்த பாகவதர், தன்னுடைய பணிகளைக் கூறி ‘‘நீங்கள் சென்று வாருங்கள்” என்று சொன்னார். ஆனால், போகும்போது எனக்காக ஒரு உதவி செய்ய வேண்டும். என்னுடைய சார்பிலே நான் ஒரு பொருளைத் தருகிறேன். நீங்கள் நீராடும் புனித தீர்த்தத்தில் என் சார்பாக இந்தப் பொருளை நீராட்டிவிட்டு வாருங்கள்” என்றார். சொல்லியபடியே ஒரு பொருளும் கொடுத்தார் அது. ஒரு பாகற்காய். யாத்திரை கோஷ்டியினர் ஒரு சில தீர்த்தத்தில் நீராடி, திரும்ப வந்து பாகற்காயைத் தந்தனர். எல்லாத் தீர்த்தங்களிலும் இந்தப் பாகற்காயை நீராட்டினீர்களா என்றார். ஆம் செய்தோம். என்றார்கள்.உடனே அவர் எல்லோருக்கும் அந்தப் பாகற்காயை சின்ன சின்னத் துண்டுகளாக வெட்டி சாப்பிடச் சொன்னார். எப்படி இருக்கிறது? என்றார். கசப்பாக இருக்கிறது என்றனர். ‘‘பாருங்கள் இத்தனைத் தீர்த்தத்திலும் நீராடி இதன் ஸ்வபாவமான கசப்பு போகவில்லையே” என்றார்.
தீர்த்தங்களில் நீராடி நம் பாவம் போக வேண்டும் என்றால், நம்முடைய கெட்ட குணம் மாற வேண்டும். நல்ல குணங்களை ஒவ்வொரு குளத்தில் தீர்த்தமாடும் போதும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் நீராடும் தீர்த்தங்களை அசுத்தப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு திருக்குளத்தில் தீர்த்தத்தையும் பார்த்தால் அத்தனை கஷ்டமாக இருக்கிறது. திருக்குளங்களையும், ஆறு, கால்வாய்களையும், நீர் நிலைகளையும் தூய்மையாக வைத்திருந்தாலே போதும். நம்முடைய பாவங்கள் தீர்ந்து விடும். வெறும் சடங்காக நீராடி பிரயோஜனம் இல்லை. பக்தியின் நோக்கம் தீய குணங்களை மாற்றிக் கொள்வதுதான்.

தேஜஸ்வி

Related Stories: