நன்மைகளை வாரி வழங்குவார் நரசிம்மர்

நரசிம்ம ஜெயந்தி – 30.4.2026

*அவதாரங்கள் ஏன்?
பகவான் எண்ணற்ற அவதாரங்களை எடுக்கின்றான் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும், குறிப்பாக 10 அவதாரங்களை மட்டும் நாம் சிறப்பாகப் பேசுகின்றோம். ஆயினும் அவருடைய அவதாரங்கள் அதிகம். வேதம் பகவானின் அவதார வைபவத்தை “அஜாயமாநோ பஹூதா விஜாயதே” என்ற அழகான தொடரால் குறிப்பிடுகிறது. சாதுக்களை காப்பதற்காகவும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும் ஏதோ ஒரு வடிவத்தில் பகவான் கீழே இறங்கி வருகிறான். “அவ” என்றாலே மேலே இருந்து கீழே என்று பொருள். (அவ என்ற சொல் கீழ் முதலிய பொருள்களைக் குறிக்கும் வடமொழி யுபசர்க்கம்) அவரோகணம், அவதாரம் என்ற சொற்கள் இதைக் காட்டுகின்றன, பகவான் எதற்கு மேலே இருந்து கீழே இறங்கி வர வேண்டும் என்று சொன்னால் கீழே இருப்பவர்களின் சங்கடங்களைத் தீர்ப்பதற்காகவும், அவர்களை மேல்நிலையில் உயர்த்துவதற்காகவும் இறங்கி வருகின்றான். (பிறந்தார் உயர்ந்தே – திருவாய்மொழி)
*எங்கே உன் ஹரி?
பல்வேறு அடக்குமுறைகளை பிள்ளையின் மீது ஏவுகின்றான். தந்தையின் தண்டனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பிரகலாதன், பகவானால் காப்பாற்றப்படுகின்றான். இப்படியே விட்டு வைத்தால், இவன் அசுர குலத்தின் பெருமையை குறைத்து விடுவான் என்ற அகங்காரத்தினால், அவனோடு நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகின்றான் தந்தையான இரண்யன். ‘‘உன்னுடைய நாராயணன் எங்கே இருக்கின்றான்?’’ என்று கேட்க, பிரகலாதன் அற்புதமான ஒரு பதிலைச் சொல்லுகின்றான். ‘‘அப்பா, நாராயணன் எங்கே இருக்கின்றான்’’ என்று கேட்கக் கூடாது? எங்கே இல்லை என்றுதான் கேட்க வேண்டும்? காரணம் அவன் இல்லாத இடமே இல்லை. விஷ்ணு என்றாலே அவன் கரந்து எங்கும் பரந்து உளன் என்றுதான் பொருள். அவன் என்னிடமும் இருக்கின்றான். உன்னிடமும் இருக்கின்றான். இந்த பொருள்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவி இருக்கின்றான் என்று பல்வேறு உபநிடத வாக்கியங்களை மேற்கோள் காட்டி, தன்னுடைய தந்தையிடம் அவன் சொன்ன பொழுது இரண்யன் ஆத்திரம் அடைந்தான்.
*இங்கே இருக்கிறானா?
‘‘இதோ இங்கே, என் எதிரே, நானே கட்டிய இந்தத் தங்கத்தூண் இருக்கிறது. இந்த தூணில் உன்னுடைய ஹரி இருக்கின்றானா?’’ என்று கேட்க, கொஞ்சமும் தயங்காமல் மகா விசுவாசத்துடன், ‘‘ஆம். இருக்கின்றான்’’ என்று பதில் சொல்ல, தன்னுடைய கதாயுத்தினால் அந்தத் தூணை ஓங்கி அடிக்க, அந்த நிமிடமே, கோடிச் சூரிய பிரகாச ஜோதியாய் விண்ணும் மண்ணும் ஜொலிக்க பயங்கர உருவத்தோடு நரசிம்மர் வெளிப்பட்டு, இரணியனை வதை செய்தார் என்பது வரலாறு.
“எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து,
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?’’
– என்பது திருமொழியில் நம்மழ்வார் நரசிம்மரைக் குறித்துப் பாடிய பாசுரம்.
*நரசிம்ம அவதாரத்திற்கு என்ன தனிச் சிறப்பு?
மற்ற அவதாரங்களுக்கும் நரசிம்ம அவதாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று பார்க்க வேண்டும். மற்ற அவதாரத்தில், தான் ஒரு மீனாக வடிவம் எடுத்து வந்து, பிரளயத்தில் காப்பாற்றுவேன் என்று சத்தியவிரதன் என்கிற ராஜாவிடம் பகவானே சொன்னதாக வருகிறது. அதைப் போலவே கூர்மாவதாரம் எடுக்கும் போது நான் ஆமை வடிவம் எடுத்து இந்த மந்தர மலையைத் தாங்கி கடலைக் கடைந்து உங்களுக்கு அமுதம் தருவேன் என்றார். ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் முதலிய பூர்ணாவதாரங்களும் ஏற்கனவே நிர்ணயம் செய்து முன்கூட்டியே வெளிப்படுத்திய அவதாரங்கள். சில அவதாரங்களில் அவன் கர்ப்பவாசம் செய்து, சில காலம் கழித்து, தன்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுகிறான். ஆனால் நரசிம்ம அவதாரத்தை பொறுத்தவரையில் பகவானே, தான் எப்படி அவதாரம் எடுக்கப் போகின்றோம் என்பதை முன்கூட்டியே தேவர்களுக்கு அறிவித்ததாகவோ புராணங்களில் இல்லை.
*ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நரசிம்ம அவதாரம்
நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயப்படாமல் இருந்த பக்தன் பிரகலாதன் மட்டுமே. தாய் தன் குழந்தையை அணைத்துக் கொண்டு செயல்படுவது போல, பிரகலாதனை காப்பாற்ற, தன் இடுப்பில் வைத்துக் கொண்டு, இரணியனோடு போர் புரிந்ததாக ஒரு குறிப்பு இருக்கின்றது. பராசரபட்டர் அற்புதமாகச் சொன்னார். “சிங்கமானது தன்னுடைய குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டே எதிரில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவது போல” தன்னுடைய பக்தனான பிரகலாதனை அரவணைத்துக் கொண்டு எதிரியான இரண்யனை வதம் செய்தார் என்று வர்ணிப்பார். ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தில், நரசிம்ம அவதாரம் பற்றி பல இடங்களில் வருகின்றது. நரசிம்ம வபு; என்றும், ஸ்ரீ மான் என்றும், அமிருத்யு என்றும், ஸர்வ த்ருக் என்றும். ஸிம்ஹ: என்றும், சந்தாதா என்றும், சந்திமான் என்றும், ஸ்திர என்றும், அஜ: என்றும், துர்மர்ஷண: என்றும், சாஸ்தா என்றும், விச்ருதாத்மா என்றும் ஸூராரிஹா என்றும் வருகின்றது.
*108 திவ்ய தேசங்களில் 2 நரசிம்மர் தலங்கள்
நரசிம்மரைப் போற்றி பாடாத ஆழ்வார்களே இல்லை. நரசிம்மரின் திருத்தலத்தை நேரடியாக மங்களாசாசனம் செய்து பதிகம் பாடுவது ஒரு வகை. வேறு வேறு திருத்தலங்களைப் பாடுகின்ற பொழுது நரசிம்மரின் வைபவத்தை இணைத்துப் பாடுவது என்பது ஒரு வகை. 108 திவ்ய தேசங்களில் இரண்டு நேரடியான நரசிம்மர் தலங்கள் உண்டு. ஒன்று அகோபிலம் எனப்படும் சிங்கவேள் குன்றம். ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது. இங்கு நவ நரசிம்மர்கள் காட்சி தருகின்றார்கள். இன்னொன்று அரக்கோணம் அருகே அமைந்துள்ள திருக்கடிகை என்று வழங்கப்படும் சோழசிம்மபுரம். கடிகாசலமும் அகோபிலமும் மலைமேல் உள்ள தலங்கள். இரண்டு மலைகளிலும் ஏறுவது சற்று கடினம். அதாவது நரசிம்மரை கொஞ்சம் முயற்சி செய்துதான் அணுக வேண்டும். அணுகிவிட்டால் அவன் நம்மை காப்பாற்றாமல் இருக்க மாட்டான். இந்த இரண்டு திருத்தலங்களையும் நேரடியாக தரிசித்துப் பாடி இருக்கிறார் திருமங்கை ஆழ்வார்.
*எப்படிக் கொண்டாடுவது?
இந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் நமக்கும் வரவேண்டும். வரும். பிரகலாதனை நினைத்து நாமும் அவனை சரணாகதி செய்வோம். நரசிம்ம ஜெயந்தி (30.04.2026) அன்று காலையில் அவனைப் பற்றிய பல்வேறு நாமங்களைக் கூறி, துளசி மாலையால் அலங்கரித்து, நெய் தீபம் ஏற்றி வைத்து, பானகமோ பாலோ நிவேதனம் செய்து, நரசிம்ம ஜெயந்தியைக் கொண்டாடுவோம்!

Related Stories: