*சுற்றுலாத்துறை நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
மதுரை : மதுரைக்கு வந்து போகும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நகர், புறநகரின் முக்கிய இடங்களில் வழிகாட்டி பலகைகள், கூடுதல் தகவல் மையங்கள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்று, சுற்றுலாத்துறையினருக்கு கோரிக்கை எழுந்துள்ளது.வரலாற்றுப் பெருமையுடன், ஆன்மிக மேன்மை கொண்ட மதுரையை நோக்கி நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
மதுரை நகர், புறநகருக்குள் மட்டுமல்லாது, ஊரைச் சுற்றிய அத்தனை பகுதிகளிலும் தொன்மை கட்டிடங்கள், பசுமை பல்லுயிர் தலங்கள், ஆன்மிகம் மணக்கும் ஆலயங்கள் என எங்கெங்கும் அனைவரும் பார்த்து ரசித்து, வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்வதற்கான இடங்கள் ஏராளமாக இருக்கின்றன.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில், திருப்பரங்கு்னறம், திருவாதவூர், யானைமலை நரசிங்கம், திருமோகூர், திருவேடகம் உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த பல்வேறு ஆலயங்களுடன், திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம், அரசு அருங்காட்சியகம், தெப்பக்குளம், உலக தமிழ்சங்கம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஏறுதழுவுதல் அரங்கம் என, பார்த்து அதிசயிக்கத்தக்கதாக ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.
மதுரை வண்டியூர் கண்மாய் பூங்கா முதல் ராஜாஜி பூங்கா, சுற்றுச்சூழல், திருநகர் பூங்கா வரை, பொழுது போக்கிற்கு பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் உற்சாகமாக வலம் வர முடியும். இதில் வண்டியூர் கண்மாய் என்பது என்றும் வற்றாத ஒரு கடல் போல் காட்சி தருவது, அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தும் என்பதை மறுக்கமுடியாது.
தமிழர் தொன்மை அடையாளம் காட்டும் கீழடி, மதுரைக்கு அருகில் இருக்கிறது. யானைமலை, கீழக்குயில்குடி, முத்துப்பட்டி, மாங்குளம், அரிட்டாபட்டி, மேட்டுப்பட்டி, வரிச்சூர், விக்கிரமங்கலம், அழகர்மலை, குப்பல்நத்தம், கருங்காலக்குடி, கீழவளவு, காரைக்கேணி, மலைப்பட்டி, கொங்கர் புளியங்குளம் வரை தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் சமணர் படுகைகள் இங்கு நிறைந்து கிடக்கிறது.
மதுரையின் சித்திரை திருவிழாவை காணவும், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகள் பார்க்கவும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குட்லாடம்பட்டி அருவி முதல் நாகதீர்த்தம் வரை குளித்து மகிழ்வதற்கான இடங்களுடன், மலையேற்றத்திற்கு வசதியான பகுதிகளும் இங்கு அதிகமுள்ளன.
மேலும், வெளிநாட்டினர் குறைந்த செலவில் சிகிச்சை பெற்றுத் திரும்ப வசதியாக மருத்துவச் சுற்றுலா முதல் அறுசுவைகளையும் ரசித்து ருசித்திட விதவித உணவுகளின் தலைநகர் என்ற பெருமையையும் மதுரை தன்னகத்தே பெருமையுடன் பாதுகாக்கிறது.
எனவே தமிழகத்திற்கு வந்து போகும் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளில் அதிகம் பேர் மதுரையை கண்டுகொள்ளாமல் செல்வதில்லை. இவ்வகையில் சுற்றுலா நகரம் என்ற பெருமைக்குரிய மதுரையில், கூடுதல் சுற்றுலா வசதிகளை, முக்கிய இடங்களில் சுற்றுலா இடங்களுக்கான வழிகாட்டு பலகைகளை, தகவல் மையங்களை அதிகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: மதுரையில் பாலங்கள், சாலை அகலப்படுத்தல் என நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான மதுரை வரும் வெளிநாடு, வெளிமாநில மற்றும் பயணிகள் உரிய இடங்களுக்கு செல்ல முக்கிய இடங்களில் சுற்றுலாத்துறை சார்பில் புதிய வழிகாட்டு பலகைகள் அமைக்கப்பட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகள் முன்பு மதுரை திருமலை நாயக்கர் மகால் முன்பகுதி துவங்கி விமான நிலையத்திற்கான பாதை வரை பல இடங்களில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகள் சேதமடைந்து காணபப்படுகின்றன. அவற்றில் உள்ள தகவல்களை வாசிக்க முடியாத அளவிற்கு போயிருக்கிறது.
திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் வைத்திருந்த வழிகாட்டு பலகைகள், சாலை விரிவாக்கம் காரணமாக அகற்றப்பட்டுள்ளன. தற்போது மதுரை நகருக்குள்ளும், சுற்றிலும் சுற்றுலாத்தலங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன.
இதனை கருத்தில் கொண்டு விமான, ரயில், பஸ் நிலையங்கள், ஆன்மிகத்தலங்கள் என முக்கிய பகுதிகளில் சுற்றுலாத்துறை சிறப்பு நடவடிக்கையாக வழிகாட்டி பலகைகளுடன், தேவையான இடங்களில் புதிய தகவல் மையங்களையும் சுற்றுலாத்துறையினர் ஏற்படுத்திட வேண்டும்.
ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் முன்னதாக, அதற்கான தூரம் மட்டுமல்லாது, அந்தந்த இடங்களின் வரலாற்று மேன்மைகள் குறித்த விபரங்களையும் தகவல் பலகைகளில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
