சென்னை: மார்புப் பகுதியில் இருந்து 5 கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி, டைட்டானியம் உலோகத்தால் ஆன விலா எலும்பைப் பொருத்தி அரசு மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். வீரியம் மிக்க எலும்புப் புற்றுநோய் (Malignant Bone Tumor) எனும் விலா எலும்புப் புற்றுநோய் மிகவும் அரிதான நோயாகும். இது பெரும்பாலும் வயதானவர்களையே பாதிக்கும். இந்தப் புற்றுநோய் ஏற்பட்டால், விலா எலும்புகளைப் புற்றுநோய் செல்கள் அரித்துவிடும். இதனால் மார்புப் பகுதியில் உள்ள உறுப்புகள் சரியாகச் செயல்படுவதிலும், மூச்சுவிடுவதிலும் கடும் சிரமம் ஏற்படும்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயதான கூலித் தொழிலாளருக்கு மார்புப் பகுதி விலா எலும்பில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நெஞ்சுப் பகுதியில் அதிக வீக்கம் இருந்ததால் அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு புற்றுநோய் கட்டி இருப்பது உறுதியானது. அந்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், உயிர் பிழைக்கும் வாய்ப்பு வெறும் 50 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் தனியார் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பண வசதி இல்லாததால் அவர் கிண்டியில் உள்ள கலைஞர் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையில் அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின்போது அவரது நெஞ்சுப் பகுதியில் இருந்து 5 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். அதனை தொடர்ந்து விலா எலும்புகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், பாதிக்கப்பட்ட விலா எலும்புகளையும் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதற்கு மாற்றாக, டைட்டானியம் உலோகத்தால் ஆன விலா எலும்பு போன்ற வடிவமைப்பை 3டி தொழில்நுட்பம் மூலம் தயாரித்து, அதனையும் வெற்றிகரமாகப் பொருத்தினர். இந்த அறுவை சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் 13 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுவதும் இலவசமாகவே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த நோயாளி உடல்நலத்துடன் இருக்கிறார்.
