சென்னை: தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இவர் சுப்பிரமணியபுரம், நாணயம், ஈசன், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் நேற்று மதியம் கொட்டிவாக்கத்தில் உள்ள உணவத்தின் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உணவு அருந்த சென்றார். பிறகு வீட்டிற்கு செல்ல அவர் காரை எடுக்க வந்த போது, அவரது காரின் இடதுபுறம் உள்ள பின் பக்க கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனே சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி போலீசார் உணவகம் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, காரில் கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் யாரேனும் கண்ணாடியை உடைத்தனரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ காட்சியுடன் பதிவு செய்துள்ளார். ‘தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
