×

சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க சென்றவர்கள் சென்னை நோக்கி படையெடுப்பு: ரயில்கள், பஸ்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்: போக்குவரத்து நெரிசலை குறைக்க விரிவான ஏற்பாடுகள்

சென்னை: சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க சென்றவர்கள் நேற்று சென்னையை நோக்கியை படையெடுக்க தொடங்கினர். இதனால் ரயில்கள், பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க விரிவான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23ம் தேதி நடந்தது. சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்ய, ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், குறிப்பாக தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் இங்கு வியாபாரம், மேற்படிப்பு, வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் முக்கிய நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு ெசல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்று வருகின்றனர். அதே போன்று சென்னையில் வசிப்பவர்கள் வாக்களிப்பதற்காக கடந்த 21ம் தேதி முதலே சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். இவர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதற்காக சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து முனையங்களில் இருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்களில் கடந்த 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை சுமார் 6.27 லட்சம் பேர் பயணித்துள்ளனர். அதேபோல், சென்னையிலிருந்து இயக்கப்பட்ட தனியார் ஆம்னி பஸ்களில் சுமார் 3.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதுதவிர ரயில்களில் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் கார் உள்ளிட்ட பிறவாகனங்கள் மூலமாகவும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இப்படி அரசு, தனியார் பஸ், ரயில், சொந்த வாகனங்கள் என 3 நாட்களில் மட்டும் சுமார் 19.37 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு வாக்களிப்பதற்காக சென்றுள்ளனர். சென்னையில் இருந்து சென்றவர்கள் கடந்த 23ம் தேதி தேர்தலில் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து 24ம் தேதி ஒரு நாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையாகி விடும் என்று எண்ணி வாக்குப்பதிவுக்கு மறுநாள் விடுமுறை எடுத்து கொண்டனர். தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்தது.

4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முன்தினம் முதல் சென்னையை நோக்கி திரும்ப தொடங்கினர். அதே நேரத்தில் 80 சதவீதம் பேர் நேற்று காலை முதல் தான் சென்னைக்கு திரும்ப தொடங்கினர். காலை முதல் அவர்கள் கார், பஸ், ரயில் மூலம் சென்னைக்கு திரும்பியதை காண முடிந்தது. இதனால் தென்மாவட்டங்களில் இருந்து காலை, மாலை நேரத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் ஹஸ் புல் ஆனது.

ஒவ்வொரு ரயிலிலும் காத்திருப்போர் பட்டியல் என்பது மிக அதிகமாக காணப்பட்டது. எப்படியும் சென்னைக்கு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் காலை முதல் அனைவரும் ரயில் நிலையத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால், அனைத்து ரயில் நிலையங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக முன்பதிவு செய்தவர்கள் எந்தவித சிரமமும் இன்றி ரயில்களில் பயணத்தை தொடர்ந்தனர். அதே நேரத்தில் அன் ரிசர்வ் டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணத்தை தொடங்கினர்.

இதனால், அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடம் கிடைக்காதவர்கள் படிக்கட்டில் உட்கார்ந்தவாறு பயணம் செய்த காட்சியை காண முடிந்தது. அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன், சென்னைக்கு நேற்று மட்டும் 3,184 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பிற இடங்களுக்கு 3345 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14,508 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் பலர் கார்களிலும் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், இன்று அதிகாலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இன்று காலை முதல் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்களுக்கு வழித்தட மாற்றத்தை காவல் துறை அறிவித்துள்ளது.

Tags : assembly elections ,Chennai ,assembly ,Tamil Nadu Legislative Assembly Election ,
× RELATED வெளிநாட்டு நிதியுதவி சட்டதிருத்த...