×

ஒன்றிய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மாநிலங்களுக்கு முன்னுரிமை ஒதுக்கீடு நிறுத்தம் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் முடிவை ஏற்க முடியாது: அன்புமணி அறிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; இந்தியாவில் உள்ள மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குழுவின் 16ம் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.ஒன்றிய அரசுக்கு சொந்தமான அனல் மற்றும் அணு மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதியை, அந்த மின் நிலையங்கள் அமைந்துள்ள மாநிலத்திற்கே முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் முறையை நிறுத்தவும், மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் போட்டி ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யவும் அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தமிழ்நாடு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களின் மின்வாரியங்களுக்கும் மின்வழங்கல் மற்றும் பொருளாதார அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மாநிலங்களின் உரிமையையும் பறிக்கும் இம்முடிவை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய மின்னுற்பத்தி நிலையங்கள் முன்னுரிமை அடிப்படையில் குறைந்த விலைக்கு வழங்கும் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, போட்டி ஏல முறையில் விலையை நிர்ணயம் செய்தால், மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

இன்றைய சூழலில் இன்னொரு மின்சாரக் கட்டண உயர்வை தமிழ்நாட்டு மக்களால் தாங்கவே முடியாது. மத்திய மின்னுற்பத்தி நிலையங்களால் ஏற்படும் ஆபத்துகளையும், பாதிப்புகளையும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்கொள்ள வேண்டும்; ஆனால், அவற்றின் உரிமைகளை அவற்றுக்கு வழங்காமல், மின்சாரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து மத்திய மின்னுற்பத்தி நிலையங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

எனவே, மத்திய மின்னுற்பத்தி நிலையங்கள் தங்களின் முடிவை கைவிட்டு, இப்போது நடைமுறையில் உள்ளவாறே அவை அமைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union ,Anbumani ,Chennai ,PMK ,Technical Coordination Committee of Electricity Boards ,India ,Union government ,
× RELATED சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு...