×

போலி பேராசிரியர்கள் விவகாரம்; 10 இலக்க அடையாள அட்டை முறை: அண்ணா பல்கலை அதிரடி

சென்னை: பல்கலைக் கழகங்களில் போலி பேராசிரியர்கள் பிரச்னையை தடுக்கும் வகையில் 10 இலக்க அடையாள அட்டையை அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. இது 2026-2027 கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது. பல்கலைக் கழகங்களில் போலியாக பதிவு செய்து பேராசிரியர்களாக பணியாற்றும் நபர்களை கண்டறியவும், அதை தவிர்க்கவும் 10 இலக்க அடையாள எண்ணை அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இதையடுத்து, இந்த அடையாள எண்ணைப்பெறுவதற்காக அனைத்து பொறியியல் பேராசிரியர்களும் தங்களின் தனிப்பட்ட மற்றும் கல்விச் சான்றுகளுடன் கூடிய Geotagged photo-வை ஏப்ரல் 30ம் தேதிக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலை கழகம் அறிவுறுத்தியுள்ளது. பேராசிரியர்களை விவரங்களை அந்தந்த முதல்வர்களும் சமர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பேராசிரியரின் பயோமெட்ரிக் மூலம் அவர்களின் விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது UI-DAI மூலம் சரிபார்க்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, கடந்த 2023-2024ம் கல்வி ஆண்டில் 350க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றுவதாக சுட்டிக்காட்டியதை அடுத்து, பல்கலை கழகம் நடத்திய விசாரணையில் 1000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவதும் தெரியவந்தது.

மேலும், பல்கலைக் கழக சிண்டிக்கேட், முன்னாள் துணை வேந்தர் ஆர்.வேலராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டதை முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி ரத்து செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, 2026-2027ம் கல்வி ஆண்டுக்கான கல்லூரிகள் இணைப்பு வழங்கும் செயல்முறையில் ஏற்படும் தாமதம் குறித்து கல்லூரிகள் கவலை கொண்டிருந்தன. அந்த வகையில் இந்த ஆண்டு கல்லூரிகளில் பல்கலைக் கழகம் நேரடியாக ஆய்வு நடத்துமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும் இணைப்பு நீட்டிப்பு வழங்குவதற்காக பல்கலைக் கழகம் சார்பில் இணைப்பு கல்லூரிகளிடம் இருந்து விவரங்களை கேட்டது. ஏஐசிடிஇ-ன் இணைப்பு நீட்டிப்பு, மாணவர் சேர்க்கை, இளநிலை மற்றும் முதுநிலைப்படிப்புகள், ஆய்வக வசதிகள், வகுப்பறைகள், நூலகம் மற்றும் கட்டிடத் திட்டங்கள், நில விவரங்கள் ஆயவையும் இணைப்புக்கான விண்ணப்பங்களில் அந்தந்த கல்லூரிகளின் முதல்வர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பல்கலைக் கழகம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கல்லூகளால் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை நேரில் சரிபார்க்க, பல்கலைக் கழகம் சார்பில் ஆய்வுக் குழுக்களையும் அனுப்பியுள்ளது.

Tags : Anna University ,Chennai ,
× RELATED சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு...