×

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னைவாசிகளை வாட்டி எடுத்த வெயில்: காலை நேரத்தில் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர்: மாலை நேரத்தில் பூங்கா, கடற்கரையில் மக்கள் வெள்ளம்

சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னைவாசிகளை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காலை நேரத்தில் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். மாலை நேரத்தில் பூங்கா, கடற்கரையில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து மார்ச், ஏப்ரல்(இம்மாதம்) வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக இந்த மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது.

இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கத்தால் மக்கள் காலை 11 மணிக்கு மேல் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க தொடங்கினர். வீடுகளிலேயே முடங்கிய காட்சியை காண முடிந்தது. தப்பி தவறி வெளியே சென்றவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் உடம்பு முழுவதும் வியர்த்து சட்டை முழுவதும் ஈரமானது. வெயிலின் ஊக்கிரத்தால் மயக்கம் வரும் நிலையை உணர முடிந்தது. வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு வாகனங்களில் அனல் கக்கியது.

இந்த நிலையில் வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படுகின்ற கத்தரி வெயில் வருகிற 4ம் தேதி தொடங்க உள்ளது. கத்திரி வெயில் தொடங்க இன்னும் குறுகிய நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலை முதல் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியது. காலை 8 மணிக்கே வெயில் சுள்ளென்று அடிக்க தொடங்கியது. 11 மணிக்கு மேல் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

இதனால், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். பிற்பகல் வேளையில் சென்னையின் இதய பகுதியாக விளங்கும் அண்ணாசாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. வாகனங்களில் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழை விடுமுறை தினம் வேறு. அனைவரும் வீட்டில் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியும், வெயிலின் தாக்கத்தில் இருந்து வீடுபட்டு இயற்கை காற்றை சுவாசிக்கவும் சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதியை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கினர்.

இதனால், மாலை 4 மணி முதல் கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக கடற்கரை பகுதிகள் காட்சியளித்தன. குடும்பத்துடன் வந்து கடற்கரை பகுதியில் மக்கள் பொழுதை போக்கினறர். இதே போல சென்னையில் உள்ள சிறிய பூங்காக்கள் முதல் பெரிய பூங்காக்கள் வரை மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக சிறுவர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அங்கேயே வீட்டில் இருந்து சமைத்து கொண்டுவரப்பட்ட உணவுகளை குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். அது மட்டுமல்லாமல் பூங்காக்களுக்கு வெளியே சிறு, சிறு கடைகளில் விற்பனை களைக்கட்டியது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலுக்கு இதமான பழங்கள் வரத்தும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சாலையோரங்களில் தர்பூசணி, கிர்ணி பழம், சாத்துக்குடி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்கி செல்லும் காட்சியை காண முடிந்தது. தர்ப்பூசணி ஒரு பீஸ் ரூ.20க்கும், இளநீர் தரத்திற்கு ஏற்றார் போல் ரூ.40, ரூ.60க்கும், வெள்ளரிக்காய் ஒரு துண்டு ரூ.10க்கும், மோர் ஒரு கிளாஸ் ரூ.10க்கும் விற்கப்பட்டது.

இதே போல எலுமிச்சை சர்பத், கிர்ணிப்பழம், மாதுளம்பழம், ஆரஞ்ச் பழம் உள்ளிட்ட பழங்கள் ஜூஸ் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. வரும் நாட்களில் இன்னும் வெயில் அதிகரிக்கும் என்பதால் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Agni ,Tamil Nadu ,
× RELATED சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு...