×

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி புகார்: தபால்துறை அதிகாரிகள் விசாரணை

பூதப்பாண்டி: தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்தியதை கணினியில் வரவு வைக்காமல் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து தபால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்தவர் நாராயண பிள்ளை. ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவரது மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நாராயண பிள்ளை தனது பேத்திக்கு மகளை பொறுப்பாளராக பதிவு செய்து பூதப்பாண்டி தபால் நிலையத்தில் ஒன்றிய அரசின் செல்வமகள் திட்டத்தில் கணக்கு தொடங்கி பேத்தியின் எதிர்கால தேவைக்காக பணம் சேமித்து வருகிறார். இவ்வாறு அவர் ரூ.3.5 லட்சம் வரை செலுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாராயண பிள்ளை தபால் நிலையத்தில் பணம் செலுத்தினார்.

பின்னர் தான் செலுத்திய மொத்த தொகை குறித்து கணக்கு பார்த்தபோது ரூ.3.5 லட்சம் குறைவாக இருப்பது தெரியவந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக பூதப்பாண்டி தபால் நிலையத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் புகார் அளித்தார். இதையடுத்து அதிகாரி கணக்கு புத்தகத்தை வாங்கி ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட சில நாட்கள் நாராயண பிள்ளை செலுத்திய பணம் கணினி மூலம் கணக்கில் வரவு வைக்காமல், கைகளால் எழுதி முத்திரையிட்டு கொடுத்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் நாராயண பிள்ளை வீட்டுக்கு சென்று அவர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்திய கணக்கு புத்தகத்தை பெற்று அதனை ஆய்வு செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், ‘‘என்னிடம் மோசடி நடந்தது போல் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு பல கோடி ரூபாய் மோசடி நடந்து இருக்கலாம். எனவே உயர்மட்ட குழு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக பூதப்பாண்டி தபால் துறை அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது உண்மை தான். இதில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது? என விசாரணை நடந்து வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். தபால் துறையின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பணம் செலுத்தியவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags : Postal Department ,Bhutapandi ,Narayana Pillai ,Kumari district ,
× RELATED சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு...