விசிக பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த அண்ணா நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி(எ)ஆண்டனி ஜோன்ஸ்பால்(39), விசிக பிரமுகர். இவருக்கும் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி தமிழரசன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆண்டனி குடியிருக்கும் அண்ணா நகர் பகுதிக்கு அருகே, ரவுடி தமிழரசனின் கூட்டாளிகளான பரத்ராஜ்(21) மற்றும் 17வயது சிறுவன் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆண்டனி, அவர்களை கண்டித்துள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த இரு வாலிபர்களும் ஆண்டனி குறித்து கூட்டாளியான ரவுடி தமிழரசனுக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதற்கு தமிழரசன், அவனை பழிவாங்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

அதன் பின்பு பரத்ராஜ் மற்றும் சிறுவனும் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி ஆண்டனி வீட்டின் அருகே நேற்று சென்று, அங்கு நிறுத்தியிருந்த கார் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பினர். இதில் காருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லையாம். இதுகுறித்து ஆண்டனி சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து பரத்ராஜ் மற்றும் 17வயது சிறுவனை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழரசனை தேடி வருகின்றனர்.

Related Stories: