நாகை: தமிழகத்தில் கடந்த 14ம் தேதி நள்ளிரவு முதல் மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. அதேசமயம் குறிப்பிட்ட எல்லை வரை பைபர் படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது. தடை காலத்தால் மாநிலம் முழுவதும் 10 லட்சம் மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் 1,000 விசைப்படகுகள், தஞ்சையில் 150 விசைப்படகுகள், புதுக்கோட்டையில் 350 விசைப்படகுகள், மயிலாடுதுறையில் 250 விசைப்படகுகள், காரைக்காலில் 200 விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் சுமார் 1.50 லட்சம் மீனவர்கள், 10 லட்சம் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் டெல்டாவில் தினம்தோறும் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாகவே தடை காலத்தை பயன்படுத்தி நாகை மீனவர்கள் தங்களது விசைப்படகுகளையும் வலைகளையும் சீரமைப்பது வழக்கம். படகுகளுக்கு வர்ணம் தீட்டுதல், இன்ஜினை பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகளில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நாகை மாவட்ட மீனவர்கள் கூறுகையில், ‘’விசைப்படகுகளை சீரமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மீனவர்கள் வலையில் அதிகளில் மீன்கள் சிக்கும். இப்போது போதிய மீன்கள் சிக்குவதில்லை.
வானிலை மாற்றம் காரணமாக பல நாட்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் எங்களது குடும்ப வாழ்வாதாரத்தை காப்பதற்கே சிரமப்பட்டு வருகிறோம். லட்சக்கணக்கில் செலவு செய்து விசைப்படகுகளை சீரமைப்பது சிரமம். எனவே விசைப்படகுகளை சீரமைக்க தமிழக அரசு வங்கி கடன் வழங்க வேண்டும். டீசலை ஜிஎஸ்டி உச்ச வரம்புக்குள் கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக மாநில அரசு உயர்த்தியுள்ளது. இந்த தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்றனர்.
