இலவசம் கொடுத்து அடிமையாக்கிவிட்டனர் அதிமுக, பாஜகவை தூக்கி எறிய வேண்டும்

விழுப்புரம், பிப். 24: தமிழகத்தில் அதிமுக, பாஜகவை தூக்கி எறிய வேண்டுமென தேமுதிக முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் பேசியுள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக, அதிமுகவில் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக, பாமகவுடன் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதாகவும், இதனால் கூட்டணி உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், தேமுதிகவின் நிலைபாடு என்னவென்று தெரியாமல் அக்கட்சி நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிகவை, இந்த தேர்தலில் கழற்றிவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேமலதாவும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம், அனைத்துத் தொகுதிகளுக்கும் கட்சியில் விருப்ப மனு வாங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், கூட்டணி கட்சிகளை கண்டித்து விழுப்புரத்தில் நேற்று தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது அதிமுகவுடான கூட்டணி பிளவுபட்டுவிட்டதா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக, பாஜகவை தேமுதிக நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெங்கடேசன் பேசுகையில், நீண்ட நாட்களுக்குப்பிறகு, மக்களின் பாதிப்புக்காக தேமுதிக குரல் கொடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு என்ற அடிப்படையில்தான் இயக்கத்தை விஜயகாந்த் தொடங்கியுள்ளார்.

எந்த கட்சியாக இருந்தாலும் குறைகளை சொல்லும் தெம்பு, திராணியும் தேமுதிகவுக்கு உள்ளது. கூட்டணி தர்மத்தை தேமுதிக இதுவரை மீறியதில்லை. அதேசமயம் பல துரோகங்களையும் நாங்கள் சந்தித்துள்ளோம். தற்போது அதைப்பற்றி கவலைப்படவில்லை. விஜயகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம். தேமுதிகவின் செல்வாக்கையும், மதிப்பையும் குறைத்துவிட வேண்டாம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பிரசாரத்தில் விஜயகாந்திற்கு வந்த கூட்டத்தை அனைவரும் அறிவார்கள். எங்கள் பலத்தை காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனை பார்க்க நீங்கள் தயாராக இருங்கள். பூத்திற்கு ஆளில்லாத கட்சிகளுடன் கூட்டணி பேசுகிறார்கள். தினசரி உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வேலைவாய்ப்பு, சுயதொழிலுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலவசங்களை கொடுத்து மக்களை அடிமையாக வைத்துள்ளனர். அதிமுக, பாஜகவை தூக்கி எறியவேண்டும் என ஆவேசமாக கூறினர்.

Related Stories:

>