கம்பத்தில் பரிதாபம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 வாலிபர்கள் உடல் சிதறி பலி

கம்பம்: கம்பத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர். தேனி மாவட்டம், கம்பம், காட்டுப்பள்ளிவாசல் தெருவில் முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 2 அறைகள் உள்ளன. 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தரைசக்கரம், புஸ்வாணம் உள்ளிட்ட வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த ஒரு வாரமாக பட்டாசு ஆலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறைக்கு பின் நேற்று ஆலை திறக்கப்பட்டது.

காலையில் பணிக்கு வந்த கம்பம், தெற்கு தெருவை சேர்ந்த தினேஷ் என்ற தீனா (23), கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்த சூர்ய பிரபு (21) ஆகியோர், டார்க் ரூம் அறையை திறக்க முயன்றனர். அப்போது, உராய்வு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடிவிபத்தில் தினேஷ், சூர்யபிரபு ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி சத்தம் 3 கிமீ தூரத்திற்கு கேட்டுள்ளது. மேலும் அறை இடிந்து கட்டிட கழிவு பறந்து 200 மீட்டர் தொலைவில் வந்த லோடு வேன் மீது விழுந்தது.

இதில் வேன் கண்ணாடி நொறுங்கியது. நல்வாய்ப்பாக வேனில் வந்தவர்கள் உயிர்தப்பினர். தகவலறிந்து கம்பம், உத்தமபாளையத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர், பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தேனி எஸ்பி சினேக பிரியா பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கம்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். விருதுநகரில் ஏப்19ல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 25 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

* 2 ஆண்டுக்கு முன் திறப்பு
தென்மாவட்டங்களை பொறுத்தவரை விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. கம்பம் நகர் பகுதியில் பட்டாசு ஆலை இல்லாத சூழ்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்புதான் இந்த பட்டாசு ஆலையை புதிதாக திறந்து உள்ளனர். அதற்குள் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: