அரவிந்த் கெஜ்ரிவால் ஆடம்பர வாழ்க்கைக்கு பழகி விட்டார்: பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பழகி விட்டார் என பாஜ குற்றம்சாட்டி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் டெல்லி முதல்வராக பதவி வகித்தபோது, சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள பிளாக் ஸ்டாப் சாலையில் 6ம் எண் கொண்ட அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பங்களாவை புனரமைத்து, ஆடம்பரமாக மாற்ற கெஜ்ரிவால் ரூ.33 கோடி அளவுக்கு பணம் செலவழித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த அரசு பங்களாவை சீஷ் மஹால் என பாஜ வர்ணித்து வருகிறது.

இந்த சூழலில் டெல்லி பேரவைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்து, பாஜ வெற்றி பெற்றது. இதையடுத்து சிவில் லைன்ஸ் பகுதியில் இருந்த அரசு பங்களாவை கெஜ்ரிவால் காலி செய்தார். அதன் பின்னர் அவருக்கு லோதி எஸ்டேட்டில் 7ம் வகைப்பிரிவை சேர்ந்த அரசு பங்களா ஒதுக்கப்பட்டதால், அங்கு தற்போது கெஜ்ரிவால் தங்கி உள்ளார். இந்த பங்களாவை சீஷ் மஹால் 2 என பாஜ அழைத்து வருகிறது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பழகி விட்டார் என பாஜ குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து டெல்லி பாஜ தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் வர்மா, சீஷ் மஹால்-2 ன் புகைப்படங்களை வௌியிட்டார்.

பின்னர் பேசிய பர்வேஷ் சாஹிப் வர்மா, “ஆடம்பரமாக வாழ்வது கெஜ்ரிவாலுக்கு வழக்கமாகி விட்டது. டெல்லி மக்களால் சீஷ் மஹால் 1ல் இருந்து வேளியேற்றப்பட்ட கெஜ்ரிவால், பஞ்சாப்புக்கு சென்றார். தற்போது லோதி எஸ்டேட்டில் ஒதுக்கப்பட்ட பங்களாவில் வசிக்கிறார். அங்கு ஆடம்பர வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கும் பங்களாக்களுக்கு ஒன்றிய அரசு இவ்வளவு பணம் செலவு செய்வதில்லை. கெஜ்ரிவால் தனது சொந்த பணத்தை வைத்து, சீஷ் மஹால் 2ல் ஆடம்பர வசதிகளை செய்துள்ளார்.

இதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது? அந்த தொகை எங்கிருந்து வந்தது என்பதற்காக ஆதாரங்களை கெஜ்ரிவால் வௌியிட வேண்டும். லோதி எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் 5 படுக்கை அறைகளும், 4 வரவேற்பறைகளும் உள்ளன. பிற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களை விடவும், இதில் ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது? அந்த தொகை எங்கிருந்து வந்தது என்பதற்காக ஆதாரங்களை கெஜ்ரிவால் வௌியிட வேண்டும்” என குற்றச்சாட்டுகளுடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: