வாகன காஸ் தட்டுப்பாடு எதிரொலி; சென்னையில் அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்: 3 மணி நேரம் காத்திருக்கும் அவலம்

 

வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக ஓட்டுநர்கள் குமுறல்

சென்னை: வாகன காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பங்குகளில் ஆட்டோக்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வரிசைக்கட்டி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக ஓட்டுநர்கள் தங்களின் குமுறலை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக எல்.பி.ஜி ஆட்டோ எரிவாயு தட்டுப்பாடு பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் மாற்று எரிபொருளான எல்.பி.ஜி-க்கு மாறிய ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள், தற்போது எரிவாயு கிடைக்காமல் வீதிகளில் வரிசை கட்டி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையின் முக்கியப் பகுதிகளான கிண்டி, வடபழனி, ஆவடி, மற்றும் பூந்தமல்லி போன்ற இடங்களில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களில் அதிகாலை 3 மணி முதலே ஆட்டோக்கள் வரிசையில் நிற்கத் தொடங்குகின்றன. சில இடங்களில் இந்த வரிசை ஒரு கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டிச் செல்கிறது. ஒருமுறை டேங்க் நிரப்புவதற்கு ஓட்டுநர்கள் 3 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்களின் உழைக்கும் நேரம் வீணாகி, சவாரிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் ஒருபுறம் இருந்தாலும், விநியோகச் சங்கிலியில் உள்ள குளறுபடிகளே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

பல தனியார் எரிவாயு நிலையங்கள் ‘ஸ்டாக் இல்லை’ என்ற பலகையைத் தொங்கவிட்டுள்ளதால், அரசு எரிவாயு நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது. இந்த தட்டுபாடு குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறியதாவது: 3 மணி நேரத்திற்கு மேலாக கேஸ் போடுவதற்காக காத்திருக்கிறோம். கேஸ் தட்டுப்பாட்டால் ஒரு நாளில் பாதியளவு நேரம் வரிசையிலேயே கழிந்துவிடுகிறது. மீதமுள்ள நேரத்தில் கிடைக்கும் வருமானம், ஆட்டோ வாடகை மற்றும் அன்றாடத் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. இது தவிர, தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சில இடங்களில் எல்.பி.ஜி விலை சட்டவிரோதமாக உயர்த்திக் கேட்கின்றனர். ரூ.54 கேஸ் விலை இருந்த நிலையில் தட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு பங்குகளில் வெவ்வேறு விலை வாங்கப்படுகிறது.

எங்களுக்கு ஆட்டோ ஓட்டினால் தான் வாழ்வாதாரம் அதனால் அந்த விலை கொடுத்து கேஸ் நிரப்பிக்கொள்கிறோம். தேர்தல் அறிவித்த பின் ஓரளவிற்கு எல்.பி.ஜி ஒன்றிய அரசு தமிழகத்திற்கு அனுப்பி கொண்டிருந்தது. ஆனால் இப்போது தேர்தல் முடிந்த நிலையில் கேஸ் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு அனுப்புமா என கேள்வி குறியாக உள்ளது. இருப்பு வைக்கப்பட்டிருந்த பங்குகளில் கூட இப்போது கேஸ் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும்.இவ்வாறு கூறினர்.

இந்த கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஆட்டோக்கள் தட்டுப்பாடின்றி ஓடாததால், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் சில ஆட்டோக்களிலும் தட்டுப்பாட்டை காரணம் காட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

Related Stories: