டெய்லர் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

திண்டுக்கல், ஏப். 25: திண்டுக்கல் நகர் மத்தியில் அமைந்துள்ளது சூசையப்பர் ஆலயம். இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. திண்டுக்கல் ஆர்.வி. நகரை சேர்ந்த பரிமளா என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக சூசையப்பர் ஆலயத்தின் மேல் மாடியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிகளை முடித்து விட்டு வழக்கம்போல் கடையை பூட்டி சென்ற பரிமளா மீண்டும் நேற்று காலை கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையின் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ள கடை உரிமையாளர்களிடம் விசாரித்த போது அந்த பகுதியில் 15க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து கல்லா பட்டியில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து கடைகளில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Related Stories: