அரியலூர் அருகே துணிகரம் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க செயின் பறிப்பு

ஜெயங்கொண்டம், ஏப். 25: அரியலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தங்க செயினை பறித்து சென்ற 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நெரிஞ்சிக்கோரை பாலம் அருகே, கடந்த 17ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்து தப்பிச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக அதே நாளில் அரியலூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.வழக்கின் அடிப்படையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, உத்தரவின்படி, துணைக் காவல் கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் மனமல்லி மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவலர்கள் செந்தில் முருகன், பழனிச்சாமி, வினோத்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய்(20), மாதேஷ்(22), ராகுல்(22), கோகுல்(22), கவின்(19) ஆகிய 5 பேரும், மேலும் 17 வயதுடைய இரு சிறுவர்களும் 21ம் தேதி அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள், மூன்று சவரன் தங்கச் செயின் மற்றும் ஆறு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கைது செய்யப்பட்ட கோகுல் மீது திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே வழிப்பறி வழக்கு இருப்பதும் தெரியவந்தது.பின்னர் 21ம் தேதி அன்று, கைது செய்யப்பட்ட இரு சிறுவர்கள் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தஞ்சை அரசு கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 5 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

 

 

 

Related Stories: