ஊட்டி: நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி காவலாளியை கொலை செய்த ஒரு கும்பல், பங்களாவில் இருந்த சில ஆவணங்களையும் மற்றும் பொருட்களையும் கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக, முக்கிய குற்றவாளி சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கனகராஜ், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆஜராகினர். அப்போது நீதிபதி செந்தில்குமார் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
