தேவதானப்பட்டி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை சேர்ந்த தவெக கட்சியின் பேரூர் செயலாளர் விவேக்(26). இவர் நேற்று முன்தினம் தனது வாக்கை செலுத்துவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது தேர்தல் பணி அலுவலர்கள் வாக்களிக்க செல்பவர்களிடம் செல்போன்களை வாங்கி வைத்து கொண்டு அனுப்பி உள்ளனர். ஆனால் விவேக் செல்போனை மறைத்து வைத்து கொண்டு உள்ளே சென்று, அங்கு தான் தவெகவிற்கு வாக்களிப்பதை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அந்த வாக்குச்சாவடி மைய பிஎல்ஓ ரசூல் மைதீன், தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார், விவேக் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த கார்த்திக் என்பவர் வாக்கு செலுத்தியதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். வள்ளியூர் அருகே ஆவரைக்குளம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் அகிலன், நாம் தமிழர் கட்சியின் வாக்குச்சாவடி முகவரான இவர் ராதாபுரம் தொகுதியில் ஓட்டு போட்டு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
