சென்னை: தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று முன்தினம் நடந்தது. சென்னையில் பெரிய அளவில் பிரச்னைகள் இல்லையென்றாலும் சில இடங்களில் வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வகையில் ஆயிரம்விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே அதிமுக வேட்பாளர் வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது திமுக நிர்வாகிகளை தொந்தரவு செய்யும் வகையில் பாலசுப்பிரமணியன் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஒரு கட்டத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு தனி ஆளாக சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானம் செய்ய முயன்றும் அவர் கேட்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டார். ஒரு கட்டடத்தில் அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் வாக்கு பதிவு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அளித்த புகாரின்படி நுங்கம்பாக்கம் போலீசார் அதிமுக வேட்பாளர் வளர்மதி கணவர் பாலசுப்பிரமணியன் மீது அரசு அதிகாரியை பணி செய்யாமல் தடுத்தது, தடை செய்யப்பட்ட இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது, சிட்டி போலீஸ் ஆக்ட் 41 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
