சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட 3 மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு: 540 சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணிநேரம் கண்காணிப்பு

சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குபதிவான மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைத்து அறை மூடப்பட்டது. அந்த அறைக்கு 540 சிசிடிவி கேமராக்கள், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினருடன் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக அமைதியான முறையில் நடந்து முடிந்தது. பின்னர் 234 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை மாவட்ட வாரியாக துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு விடிய விடிய கொண்டு வந்து அரசியல் கட்சிகள் முகவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம்பில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை உரிய பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, ஸ்ட்ராங் ரூமில் வைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில், ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 ெதாகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களும், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 16 சட்டமன்ற ெதாகுதிகளுக்கான வாக்கு பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் தலைமையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய ஆயுத காவல் படையினரும் (துணை ராணுவ), 2வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 3வது அடுக்கில் சென்னை பெருநகர ஆயுதப்படை காவலர்கள், 4வது அடுக்கில் சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரில் ஆய்வு செய்து பணிகளை விரிவுப்படுத்தினார்.
இதுதவிர வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள ஸ்ட்ராங் ரூம் உள்ளே மற்றும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராணி மேரி கல்லூரியில் 172 சிசிடிவி கேமராக்கள், லயோலா கல்லூரியில் 188 சிசிடிவி கேமராக்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் 180 என மொத்தம் 540 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சிசிடிவி காட்சிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மைகங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்ட அறையின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் பகுதிகள் அனைத்து காட்சிகளும் சிசிடிவி காட்சிகள் மூலம் அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் மானிட்டர் மூலம் ஒளி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டு எண்ணும் நாளான மே 4ம் தேதி வரை இந்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் அருகே தலா 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் தலைமையில் வீரர்கள் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவசர மருத்துவ உதவிக்கு 3 மையங்களில் தலா 2 108 ஆம்புலன்ஸ்கள் மருத்துவ குழுவினருடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: