மீன்கள் பதப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்

அறந்தாங்கி, பிப்.24: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை பதப்படுத்த கோட்டைப்பட்டினம் பகுதியில் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி தொடங்கி, ஏனாதி வரை கடற்பகுதி உள்ளது. கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து விசைப்படகுகள் மூலமும், கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், பிரதாபிராமன்பட்டினம், கோடியக்கரை, பொன்னகரம், புதுக்குடி, அய்யப்பட்டினம், கோட்டைப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுப்படகு மூலமும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். விசைப்படகுகள் மூலம் திங்கள், புதன், சனிக் கிழமைகளிலும், நாட்டுப்படகுகள் மூலம் மற்ற நாட்களிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள், நண்டு, இரால் போன்றவற்றை உள்ளூர் தேவைக்காக உள்ளூர் வியாபாரிகளும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மீன் ஏற்றுமதி நிறுவனங்களும் வாங்கிச் செல்கின்றன. மீன்வரத்து அதிகம் உள்ள நாட்களில் மீன்களின் விலை பலமடங்கு குறைந்துவிடுவதால், மீனவர்களுக்கும், படகுகளின் உரிமையாளர்களுக்கும் பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. அதேபோல மழைக்காலங்களில் உள்ளூர் நுகர்வு குறைவதாலும் மீனவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இலங்கை கடற்படை தாக்குதல், டீசல் விலை உயர்வு, இயற்கை சீற்றங்கள் போன்ற நிகழ்வுகளால் மிகவும் சிரமப்பட்டு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விலை குறையும் தருணங்களிலும், அதிக மீன்வரத்து உள்ள காலங்களிலும் குளிர்பதன கிட்டங்களில் சேமித்து வைத்து விற்பனை செய்வதால், மீனவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டலாம்.

இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் கொக்குமடைரமேஷ் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்கள் பிடித்து வரும் மீனவர்களை சேமித்து வைக்க குளிர்பதன வசதியுள்ள கிட்டங்கி இல்லாததால், மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை உடனே விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் பிடித்து வரும் மீன்களை பல்வேறு தருணங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மீனவர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.

எனவே தமிழக அரசு கோட்டைப்பட்டினம் பகுதியில் மீன்களை சேமித்து வைக்க குளிர்பதன வசதியுடன் கூடிய கிட்டங்கி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளிர்சாதன வசதியுடைய கிட்டங்கி இருந்தால் மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்,நண்டு, இரால் போன்றவற்றை சில நாட்கள் பாதுகாத்து வைத்து விலை ஏற்றம் கண்டவுடன் விற்பனை செய்ய ஏதுவாகும். மேலும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் விற்பனை ஆகாவிட்டால் அதையும் சேமித்து வைக்க முடியும். இதன்மூலம் மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

Related Stories: