- தலைமை நீதிபதி
- உச்சம்
- நீதிமன்றம்
- திருவனந்தபுரம்
- தலைமை நீதிபதி
- உச்ச நீதிமன்றம்
- நீதிபதி
- ஹனி எம். வர்கீஸ்
திருவனந்தபுரம்: நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பலாத்கார வீடியோ வெளியான விவகாரத்தில் நீதிபதி ஹனி எம். வர்கீசுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது என்று பாதிக்கப்பட்ட மலையாள நடிகை ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்புக்காக திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொச்சி போலீசார் பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில்குமார் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியதாக பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட மேலும் 4 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நடிகையை பலாத்காரம் செய்தபோது அதை செல்போனில் வீடியோ எடுத்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் இந்தக் கும்பல் பலாத்கார காட்சிகளை ஒரு மெமரி கார்டில் பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த மெமரி கார்டை பின்னர் பல்சர் சுனில்குமாரின் வக்கீலிடமிருந்து போலீசார் கைப்பற்றினர். பின்னர் மெமரி கார்டை போலீசார் விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹனி எம். வர்கீஸ் இந்த வழக்கில் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மெமரி கார்டு திறந்து பார்க்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நடிகை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த வருடம் டிசம்பர் 8ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பல்சர் சுனில்குமார் உள்பட முதல் 6 குற்றவாளிகளுக்கு 20 வருடம் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது.நடிகர் திலீப் உள்பட 4 பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹனி எம். வர்கீஸ் உள்பட 5 முதன்மை நீதிபதிகளை கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உயர்நீதிமன்ற கொலீஜியம் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்திருந்தது.
இது தற்போது ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ளது. நீதிபதி ஹனி எம். வர்கீசுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது என்று ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஒன்றிய உள்துறை, சட்டத்துறை அமைச்சர் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட நடிகை கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பது: நீதிமன்றத்தில் பாதுகாப்பாக இருந்த மெமரி கார்டை யாரோ திறந்து பார்த்துள்ளனர்.
நீதிமன்றத்தில் பாதுகாப்பாக இருந்த மெமரி கார்டை திறந்து பார்த்தது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் நீதிபதி ஹனி எம். வர்கீசுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. இதுவரை இந்த வழக்கில் எனக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே ஹனி எம். வர்கீசுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
