×

சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை ரூ.25 உயர்த்த திட்டமா? ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என ஒன்றிய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன் விலையும் அதிகரித்தது. இதன் காரணமாக பொதுமக்களும், உணவக உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 3 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மேற்குவங்கத்தில் மட்டும் வரும் 29ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என தகவல் வௌியாகி உள்ளது.

இதுகுறித்து கோடக் இன்ஸ்டிடியூஷனல் நிறுவனம் வௌியிட்ட அறிக்கையில், “மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 29ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும். அதன்படி கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலருக்கு அருகில் உள்ள நிலையில், விலை லிட்டருக்கு ரூ.25 முதல் 28 வரை உயரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தன் எக்ஸ் தளத்தில், “கோடக் நிறுவனத்தின் அறிக்கை பொதுமக்களை அச்சத்திலும், பீதியிலும் ஆழ்த்துவது மற்றும் தவறாக வழிநடத்தும் செயலாகும். கடந்த 4 ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

சர்வதேச விலை உயர்வில் இருந்து மக்களை காப்பதற்காக ஒன்றிய அரசும், பொதுத்துறை உண்ணெய் நிறுவனங்களும் தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எனவே, சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளது.

* பெட்ரோல் லிட்டருக்கு ரூ.20 டீசல் லிட்டருக்கு ரூ.100 நஷ்டம்
மேற்காசியாவின் முன்னேற்றங்கள் குறித்த செய்தி மாநாட்டில் ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலர் சுஜாதா சர்மா கூறுகையில், “கச்சா எண்ணெய் மற்றும எல்பிஜி விலைகளில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. மேற்காசியா சூழல்களால் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை தயாரிக்கும் கச்சா எண்ணெய் விலை, நுகர்வோர் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த ஆண்டு பீப்பாய் ஒன்றுக்கு 70 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய், இந்த மாதம் சராசரியாக 113 டாலருக்கும் அதிகமாக இருந்தது. 2026 ஏப்ரல் நிலவரப்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், ஒன்றிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் லிட்டருக்கு 20 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 100 ரூபாயும் நஷ்டம் அடைகின்றனர். இந்த பெரும் நஷ்டம் காரணமாக எண்ணெய் நிறுவனங்களின் லாபம் குறைந்து, தினசரி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது” என்றார்.

Tags : Union government ,New Delhi ,United States ,Israel ,Iran ,
× RELATED 152 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல்...