வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பொட்டிகள் பலத்த பாதுகாப்புடன் மையங்களில் கொண்டு வைப்பு: நான்கு அடுக்கு பாதுகாப்பு: 24 மணிநேரமும் கண்காணிப்பு

சென்னை: சென்னையில் உள்ள மொத்தம் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மூன்று முக்கிய மையங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி மற்றும் ராணிமேரி கல்லூரி ஆகும். ஒவ்வொரு மையமும் தனித்தனி தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகளை சேமிக்கும் வகையில் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய ஐந்து முக்கிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறப்பு பாதுகாப்பு மையத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்தவுடன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி மாற்றப்பட்டன.

இந்த மையங்களில் நான்கு அடுக்குகளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் உள்ளூர் காவல்துறை, இரண்டாம் அடுக்கில் ஆயுதப்படை போலீசார், மூன்றாம் அடுக்கில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் நான்காம் அடுக்கில் கண்காணிப்பு மற்றும் நுழைவு கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எந்த அனுமதியும் இல்லாமல் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் கடுமையான சோதனைகள் நடைமுறையில் உள்ளன.

ஒவ்வொரு சுழற்சி முறையிலும் சுமார் 500 பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 24 மணி நேரமும் இடையறாத கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அதிகாரிகள், தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மையங்களின் அனைத்துப் பகுதிகளிலும் உயர்தர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் கிடைக்கும் பதிவுகளை மினி கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து 24 மணி நேரமும் நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன.

Related Stories: